முகப்பு
வெள்ளிமணி

ஆமீன் கூறும் ஆமோதிப்பு

ஆமீன் என்னும் அரபி சொல்லுக்கு அவ்விதமே ஆகுக என்று பொருள். குர்ஆனின் முதல் சூராவிற்குப் பாத்திஹா சூரா என்று பெயர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:08 PM
பகிர்:

ஆமீன் என்னும் அரபி சொல்லுக்கு அவ்விதமே ஆகுக என்று பொருள். குர்ஆனின் முதல் சூராவிற்குப் பாத்திஹா சூரா என்று பெயர். இச்சூரா (அத்தியாயம்) குர்ஆனின் துவக்கத்தில் இருப்பதால் தோற்றுவாய் என்று பொருள்படும் பாத்திஹை சூரா என்ற பெயரைப் பெற்றது. இச்சூராவின் ஏழு வசனங்களும் இறைவனைப் புகழ்ந்து இறைவனை இறைஞ்சுவதால் இச்சூராவை ஓதி முடித்ததும் ஓதியவரும் ஓத கேட்டவரும் ஆமீன் கூறுவது நபி வழி. இந்த சூரா ஓதி முடிந்ததும் ஆமீன் கூறுமாறு வானவர் ஜிப்ரயீல் அறிவுறுத்தியதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அல்ஹம்து சூரா ஓதியதும் ஆமீன் கூறியதைச் செவியுற்றதாக செப்புகிறார் வாயில் இப்னு ஹுஜ்ரு (ரலி) நூல் அபூதாவூத், திர்மிதீ. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்ஹம்து சூரா ஓதி முடித்ததும் முந்தி ஆமீன் கூறாது பின்னால் நின்று தொழுபவர்களுடன் சேர்ந்து கூற கோமான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டியதை பிலால் (ரலி) விளம்புவது அபூதாவூதில் உள்ளது.
 தொழுகையை முன்னால் நின்று தொழுவிக்கும் இமாம் ஆமீன் கூறினால் அவருடன் சேர்ந்து நீங்களும் ஆமீன் கூறுங்கள். உங்கள் ஆமீன் ஒலி வானவர்களின் ஆமீன் குரலுடன் கலக்கிறது. அதனால் உங்களின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, நஸஈ. ஆமீன் என்ற சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வானவர் ஆமீன் கூறிய அடியானின் பிழையை பொறுக்க இறைவனிடம் இறைஞ்சுவார் என்று இறுதி தூதர் இயம்பியதை அறிவிக்கிறார் வஹ்பு (ரலி)
 யாகூப் நபி அவர்களுடைய மற்ற மகன்களால் பழி வாங்கப்பட்ட மகன் யூசுப் நபியைச் சந்தித்த ஆசுரா நாள் வெள்ளிக்கிழமை பிழை செய்த மகன்கள் இழைத்த பிழையை பொறுத்து மகன்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்த பொழுது யூசுப் நபி தந்தைக்குப் பின்னால் நின்று ஆமீன் கூறினார்கள். மற்ற சகோதரர்களும் யூசுப் நபிக்குப் பின்னால் நின்று ஆமீன் கூறினர்.
 மூசா நபி துஆ (இறை வேட்டல்) கேட்ட பொழுது அவர்களின் சகோதரர் ஹாரூன் நபி ஆமீன் கூறினார்கள். அப்பொழுது உங்கள் இருவரின் துஆ ஏற்கப்பட்டது என்று ஏகன் அல்லாஹ் மொழிந்ததை அருமறை குர்ஆனின் 10-89 ஆவது வசனம் கூறுகிறது. இந்த வசனத்தில் இறைவன் இருவரின் துஆ என்று இயம்பியதால் ஆமீன் சொல்பவரும் துஆ கேட்டவரைப் போல் துஆவின் பயனைப் பெறுவதைப் பகர்வதாக இமாம் தப்ரீ (ரஹ்) அவர்களின் ஜாமிஉல் பயான் என்னும் நூலில் விளக்கம் அளிக்கிறார்.
 நீங்கள் நோயாளியைச் சந்திக்கும் பொழுதும் இறந்தவரைப் பார்க்கும் பொழுதும் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பைத் தெரியப்படுத்துகிறார் அன்னை உம்மு ஸலமா (ரலி) நூல்- திர்மிதீ.
 நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை நிகழ்த்த மிம்பரில் (படிகளில்) ஏறும் பொழுது ஒவ்வொரு படியிலும் நின்று ஆமீன் சொன்னார்கள். அந்த ஆமீன் வானவர் ஜிப்ரயீல் அவர்களின் துஆ விற்குக் கூறிய ஆமோதிப்பு. தப்ஸீர் காஸின் என்ற குர்ஆன் விளக்க நூலில் விழுமிய நபி (ஸல்) அவர்கள் துஆ இறைஞ்சும்பொழுது அருகிலிருப்போர் ஆமீன் கூற பணித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 ஒரு கூட்டத்தில் ஒருவர் துஆ ஓத, மற்றவர்கள் ஆமீன் சொன்னால் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவான் என்ற பூமான் நபி (ஸல்) அவர்களின் போதனையை அறிவிக்கிறார் ஹபீப் இப்னு மஸ்லமா (ரலி) நூல்- ஹாகிம், பத்ஹுல் பாரி என்ற நூலிலும் இப்பதிவைக் காணலாம்.
 நீங்கள் ஆமீன் கூறுவதை அதிகப் படுத்துங்கள். துஆ கேட்பவரும் ஆமோதித்து ஆமீன் கூறுபவரும் நன்மையை பெறுவதில் சம பங்காளிகள் என்ற சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதை செவியேற்று செப்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி).
 தொழுகை முதலிய வணக்க வழிபாடுகளில் இறைவனைப் புகழும் இறைஞ்சும் இனிய சொற்களைச் செவிமடுப்பின் ஆமீன் கூறி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments