வெள்ளிமணி

அடியார்களின் ஆதரவை நாடும் தொரவி கயிலாசநாதர்!

தினமணி

பல்லவர்கள், சோழர்கள் என மன்னர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட திருக்கோயில், இன்று அடியார்களின் ஆதரவுக்கரம் வேண்டி காத்து நிற்கின்றது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான கயிலாசநாதர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் தொரவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. தன் இருப்பிடம் சிதிலமடைந்திருந்தாலும், தன்னை நம்பி வந்தவர்களைக் கைதூக்கி விடும் பணியினை இன்றும் செம்மையாகச் செய்து வருகின்றார், தொரவி பெரிய நாயகி உடனுறை கயிலாசநாதர்.
 தொன்மைச் சிறப்பு: சோழமன்னர் காலத்தில், ராஜேந்திர சோழ வளநாட்டில் புனையூர் நாட்டின் துணை நாடான பனையூர் நாட்டின் ஊர்களுள் ஒன்றாகக் தொரவி விளங்கியது. பல்வர்கள், சோழமன்னர்களின் காலம் என்பதற்குச் சான்றாக இக்கோயிலில் அமைந்துள்ள இறை வடிவங்கள் விளங்குகின்றன.
 விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. இவை பல்லவர் காலத்தவை என்பது வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அருகேயுள்ள நாகச்சிலையும் பழைமையானதே. இதே போல, இத்தலத்து இறைவன் திருமேனி சோழர் காலம் என்பதையும் அறிய முடிகிறது.
 என்றாலும், சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைத்த போது , இதன் வரலாறு கூறும் பல்வேறு கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து காணாமல் போய்விட்டன. இறைவன் திருவருள் கூடி வரும் போது அதுவும் வெளிச்சத்திற்கு வரும்.
 இவ்வூரின் மேற்கே அமைந்துள்ள பனையபுரம், சோழநாட்டு ஆளுகையில் குறுநாட்டின் தலைநகரமாக விளங்கியிருந்ததை அவ்வூர் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அவ்வூரில் புகழ் பெற்ற தேவாரத்தலம் இருப்பதும், அவ்வூரில் மன்னரின் அரண்மனை, கோட்டைகள் முதலானவை இருந்ததையும் இப்பகுதியில் அமைந்துள்ள இடங்கள் சான்று கூறுகின்றன. அந்த வகையில் மகான்கள் மற்றும் துறவிகளின் வாழ்ந்த விருப்பமான இடமாக விளங்கிய பகுதி துறவியாகும். இன்று இப்பெயர் மருவி ,தொரவி என அழைக்கப்படுகிறது. அருளை வழங்கவும், கயிலைப்பேறு தரவும் இங்கே தோன்றிய இறைவன் கயிலாசநாதர் ஆவார்.
 ஆலய அமைப்பு: இவ்வாலயம் வழுதாவூர் நெடுஞ்சாலையினை ஒட்டி விசாலமான பகுதியில் அமைந்துள்ளது. சாலையை ஒட்டிய, இறைவன் சந்நிதி செங்கற்களைக் கொண்டு சுதையால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
 எளிய பலிபீடம், எளிய நந்திதேவர் மேற்கு முகமாக இறைவனை நோக்க, மகான்களுக்கும் துறவிகளுக்கும் அருள் வழங்கிய இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியாகக் காட்சி தருகின்றார். ஆலயம் சிதிலமடைந்து இருந்தாலும், தன் அருளில் எவ்வித குறையும் வைக்காமல் அருள்வழங்கி வருகின்றார்.
 ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், பல்லவர் கால விநாயகர், முருகன், நாகர் சிலைகள் வானமே கூரையாய் அமைந்துள்ளன. வலம் வந்தால் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் சந்நிதி, அதனையடுத்து, பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.
 தற்போது திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருவதால், மூலவர் திருவுருவங்கள் அனைத்தும் தனிக் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்படுகின்றது. இறைவனின் திருவுருவங்கள் பாலாலயம் செய்யப்பட்டு முறையாக வழிபாடும் நடந்து வருகிறது.
 கேணீஸ்வரர்: இந்த தொன்மையான ஆலயத்தின் தெற்கே சுமார் 400 மீட்டர் தொலைவில் வயல்வெளியின் நடுவே பெரிய வடிவிலான வேப்பமரமும் அதன் வேர்ப்பகுதியில் சிவலிங்கத்திருமேனி அமைந்துள்ளது. இவர் கேணீஸ்வரர் என வழங்கப்படுகிறார். இவருடன் மற்றொரு சிவலிங்கம், தட்சிணாமூர்த்தியின் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இதன் அருகே, லிங்கத்திருமேனி மற்றும் கொம்பு இல்லாத நந்தியின் கல் திருமேனிகள் பூமியில் புதையுண்டு காட்சி தருகின்றன.
 மகா பெரியவர்: விழுப்புரத்தில் தோன்றிய மகா பெரியவர், இப்பகுதியில் உள்ள ஆலயங்களைத் தரிசித்த போது, தொரவிக்கும் வருகை தந்து , இவ்வூர் திருக்குளத்தில் நீராடி, இங்குள்ள கயிலாசநாதரை மனமுருகி வணங்கி வழிபட்டதை, இவ்வூர் பெரியவர்கள் இன்றும் நினைவுகூருகின்றனர்.
 பரிகாரத் தலம்: ஆலயம் சிதிலமடைந்து இருந்தாலும், மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் தன்னை நம்பி வரும் அடியார்களைக் கைதூக்கி விடுகிறான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளையும், சம்பவங்களையும் இப்பகுதிவாழ் அடியார்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர்.
 இறைவன் நினைத்தால் இயலாதது ஒன்றுமில்லை என்றாலும், இத்திருப் பணியைத் தன் அடியார்கள் மூலமே நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுகின்றான்,இறைவன்.
 இதற்கு அடியார்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அந்த உதவி சிறுதுளி அளவாவது இருந்தால் போதும். பணி விரைவில் நிறைவு பெறும்.
 அமைவிடம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில், விக்கிரவாண்டி டோல் கேட்டிற்கு தென்கிழக்கே 3 கி.மீ, தொலைவில் தொரவி திருத்தலம் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: சிவத்திரு. சரவணன்- 90252 65394 / 86808 36164.
 - பனையபுரம் அதியமான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT