ஆதிசங்கரர் ஆட்கொண்ட அருட்கவி!
இறைபக்தியில் ஆர்வம் கொண்டு விளங்கிய அந்த 20 வயது இளைஞனுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வேங்கடசுப்ரமண்யன். ஒரு சித்திரா பெளர்ணமி தினத்தன்று பகல் வேளையில் அந்த குக்கிராமத்தின் வீதிகளில் அவன் வலம்
இறைபக்தியில் ஆர்வம் கொண்டு விளங்கிய அந்த 20 வயது இளைஞனுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வேங்கடசுப்ரமண்யன். ஒரு சித்திரா பெளர்ணமி தினத்தன்று பகல் வேளையில் அந்த குக்கிராமத்தின் வீதிகளில் அவன் வலம் வந்தபோது, மிகுந்த தேஜசுடன் ஒரு சந்நியாசி இடைமறித்தார். விசாலமான இடம் கொண்ட அவ்வூரிலுள்ள பெரிய ஏரியின் மத்தியில் உள்ள ஓர் ஆலமரத்தின் கீழ் அழைத்துச்சென்று அந்த இளைஞனின் நாவில் தன் ஆட்காட்டி விரலால் ஓம்காரம் நாட்டி (தீட்சை அளித்து) சின்னசாமி என்ற நாமம் சூட்டினார். பின் அங்கு படர்ந்திருந்த வெள்ளரிக்கனியை எடுத்து தானும் உண்டு; தன் சீடனாம் சின்னசாமிக்கும் ஊட்டி அருள்புரிந்து மறைந்துவிட்டார். இனி அவரை நாம் சின்னசாமி தாஸர் என்று குறிப்பிடுவோம். (இவரது காலம் 1828-82).
இந்நிகழ்வு நடந்தது, 19 -ஆம் நூற்றண்டின் முற்பகுதியில், தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள குத்தனூர் என்ற கிராமமாகும். இப்பொழுதும் சந்நியாசி உபதேசம் செய்தருளிய இடம் இவ்வூரின்கண் அமைந்துள்ள நந்தன் ஏரி மடுவில் "சந்நியாசிக்கல்' என்று அழைக்கப்படுகிறது. எப்படி திருத்தணியில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் வாயில் கற்கண்டு கட்டியை ஒரு வயோதிகர் வடிவில் வந்த முருகன் போட்டு ஆட்கொண்டவுடன், தீட்சிதரிடமிருந்து கான வெள்ளம் பீறிட்டு எழுந்ததோ, அதுபோன்று யோகி ஒருவரின் உபதேசம் பெற்ற சின்னசாமி தாஸர் "நின்னருளே அருளையா நீலகண்டா" என அடியெடுத்து தனது முதல் கீர்த்தனையை பாட ஆரம்பித்து, கடைசி சரணத்தில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தியே ஆதிசங்கரர் உருவில் தன்னை ஆட்கொண்டார் என உணர்த்துகிறார்.
பின்னாளில் தாஸரின் பரம்பரையினர் குத்தனூருக்கு அருகில் வடஇலுப்பை கிராமத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாசுவாமிகளை தரிசித்த தருணத்தில் இந்நிகழ்வை விவரித்தபோது, அவரும் ஆமோதித்து தாஸரின் புகழை வெளிக் கொணர எண்ணி, மூலகுருவான ஆதிசங்கரர், தாஸருக்கு அருள்பாலித்த இடமான ஏரிமத்தியில் இருந்து இறைவன் திருவடிபட்ட புனித மண்ணை கொண்டு வந்து குத்தனூரிலேயே நினைவு மடம் அமைத்து அங்கு பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென திருவாய் மலர்ந்தருளினார். மேலும், இக்கிராமத்திற்கு 1957 -ஆம் ஆண்டு மகாசுவாமிகள் விஜயம் செய்துள்ளார்.
ஏராளமான கீர்த்தனைகளை தமிழில் அதிக எண்ணிக்கையிலும், வடமொழியில் சிலவற்றையும் தாஸர் புனைந்துள்ளார். இவரது கீர்த்தனைகளில் பாதிக்கு மேற்பட்டவை ஸ்ரீராமனைக் குறித்தும், ராமநாமத்தைப் பற்றியும் பாடப்பட்டதாகும். திருவையாற்றில் வாழ்ந்து வந்த தியாகபிரம்மத்தின் முதுமைக் காலமும், தாஸரின் இளமைக்காலமும் சற்றேரக்குறைய 15 ஆண்டுகள் வித்தியாசமாகும். ஆதலால் இவரது தமிழ் கீர்த்தனைகளில் தியாக பிரம்மத்தின் தெலுங்கு கீர்த்தனைகளின் தாக்கம் இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. இவரே ஒரு கீர்த்தனையில் "சீருதவு தியாகராஜனுக்கும், சின்னசாமி தாஸனுக்கும் அகப்பட்டதையா ராமநாமம்" என்று தன்னோடு தியாகபிரம்மத்தை இணைத்துப் பாடுகிறார்.
அவரைப்போலவே, ஸ்ரீராம பட்டாபிஷேக உற்சவ மூர்த்திகளுக்கு பூஜை செய்யும் வழக்கத்தை தாஸர் கொண்டிருந்தார்.
ஒரு சாகித்ய கர்த்தா எத்தனை விதமான கீர்த்தனைகளை செய்ய முடியுமோ அத்தனை விதங்களில் தாஸர் செய்து அருளியுள்ளார். அவரது கீர்த்தனைகளில் புராண காவியங்கள், நிந்தா ஸ்துதி, கும்மிப்பாடல்கள், ஓடம் மற்றும் லாலி, நாடகங்கள், நொண்டிச்சிந்து, வெண்பா மற்றும் விருத்தம், தத்துவம், இறைவனின் அவதாரங்கள் என பலவகையுண்டு. தாஸர் தான் உதித்த சுக்லயஜூர்வேத மரபினையும், பாரத்வாஜ கோத்திரத்தினையும் கீர்த்தனைகளில் பதிவு செய்துள்ளார். நிலபுலன்களைக் கொண்டு விவசாயத்தையும், அதன்மூலம் வீடுபேற்றடைவதைப் பற்றியும், மக்களை நல்வழிபடுத்தி இறையருள் பெறவும் அநேக கீர்த்தனைகளை புனைந்துள்ளார். நெடுங்காலமாக குத்தனூரில் பூமியில் புதையுண்டு கிடந்த தேவிமார்களுடன் கூடிய ஸ்ரீவேத நாராயணப்பெருமாள்; இவரிடம் அசரீரியாக உணர்த்தியபடி, அவர்களது மூர்த்தங்களை கண்டெடுத்து 1856 -ஆம் ஆண்டு திருக்கோயில் அமைத்து மங்களாசாசனப் பாடல்கள் பாடியுள்ளார். இவ்வூர் சிவன் கோயிலில் உள்ள வாலீஸ்வரரைப் பற்றியும் பாடியுள்ளார்.
பல தலங்களில், ஊர்களில் ராமாயண, பாகவத உபன்யாசங்களை நிகழ்த்தியுள்ளார். இவரது உபன்யாசத்தைக் கேட்ட அமானுஷ்யமான ஒரு நபர் (பிரம்ம ராட்சச - உருவமற்றவர்) நற்கதி அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. இவரைப் போற்றி சாற்றுக்கவி தந்தவர்கள் பலர் இருந்தனர்.
காஞ்சி மகாசுவாமிகள் அருளாசிப்படி தற்போது இவ்வூர் அக்ரஹார வீதியில், பெருமாள்கோயில் எதிரில் தாஸர் மடாலய மணிமண்டபம் அமைந்துள்ளது. பூஜா மண்டபத்தில் அஷ்டாக்ஷர, பஞ்சாக்ஷர பீடமும், குரு, சிஷ்ய மூர்த்தங்களும் பிரதிஷ்டையாகியுள்ளது. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற சொல்லிற்கு இணங்க தாஸரின் வம்சாவளியினரும் இறை உணர்வும், கவி பாடும் திறன் கொண்டவர்களாகவும், பாடல்கள் புனைவதில் வல்லவர்களாகவும் விளங்குகின்றனர். அவர்கள் மூலம் தாஸரின் தமிழ் கீர்த்தனைகளை நாடறியச் செய்வது நமது கடமையாகும். அருட்கவி சின்னசாமி தாஸரின் குருபூஜை நாள் சித்திரை திருவோணம் (ஏப்ரல்-16) அன்று அமைகின்றது.
தொடர்புக்கு: 94434 69810 / 98435 68742.