பலம் தரும் பலராமர் வழிபாடு
ஸ்ரீ மகாவிஷ்ணு தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க எடுத்த தசாவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராமர் அவதாரம். மகாவிஷ்ணுவை என்றும் பிரியாத ஆதிசேஷனே ராமருடைய தம்பி லக்ஷ்மணனாகவும்
ஸ்ரீ மகாவிஷ்ணு தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க எடுத்த தசாவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராமர் அவதாரம். மகாவிஷ்ணுவை என்றும் பிரியாத ஆதிசேஷனே ராமருடைய தம்பி லக்ஷ்மணனாகவும், கிருஷ்ணரின் அண்ணன் பலராமராகவும் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பெருமாளின் அவதாரங்களிலேயே, வெண்ணிற தோற்றம் உடைய அவதாரம் ஸ்ரீ பலராமர் அவதாரம். இவர் கலப்பையை ஆயுதமாகவும், பனையைக் கொடியாகவும் கொண்டவர். இவருக்கு ரேவதி, வாருணி என்று இரண்டு மனைவிகளும் உண்டு.
தேவகி வசுதேவர் திருமணத்தின்போது தேவகியின் எட்டாவது குழந்தை, அவள் சகோதரனான கம்சனை அழிக்கும் என்று ஓர் அசரீரி ஒலிக்க, அதன் காரணமாக தேவகியையும் வசுதேவரையும் சிறையிலிடுகிறான் கம்சன். சிறையிலேயே தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொல்ல, ஏழாவது முறையாக கருவுருகிறாள் தேவகி. அப்பொழுது, ஸ்ரீ மகாவிஷ்ணு, யோகமாயாவை அழைத்து, தேவகியின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவை வசுதேவரின் முதல் மனைவியான, ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்ள, ஸ்ரீ பகவானின் ஆக்ஞையை ஏற்றுக் கொண்ட யோகமாயா, அவ்வாறே செய்து முடித்தாள். கம்சனிடம் கரு, சிதைந்து போனதாக தெரிவிக்கப்பட்டது. ரோகிணி கருவுற்ற செய்தியை அறிந்த வசுதேவர், ரோகிணி கருவுற்றதாகத் தெரிந்தால் அவளையும் கம்சன் அழித்து விடுவான் என்று எண்ணி, அவளை மதுராவை விட்டு வெளியேற்றி, ஒரு வெள்ளைக் குதிரை மூலம் ஆயர்பாடியில், நந்தகோபரின் பாதுகாவலில் இருக்க அனுப்பிவைத்தார். அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் ரோஹிணி. முனிவர் கர்காச்சாரியார் அவருக்கு "ராமன்" என்று பெயர் சூட்டினார். பின்னாளில் மிகுந்த பலத்துடன் விளங்கியதால் அவர் "பலராமர்" என்று அழைக்கப்பட்டார். மேலும், சங்கர்ஷணன், பலதேவன், பலபத்ரன், கதாயுதன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.
இவருக்குப் பின் பிறந்த கண்ணன் யசோதாவின் மகனாக வளர்ந்து வரும்போது, அவர் பலராமனுடன் ஆயர்பாடியில் பசுக்களையும் ஆடு மாடுகளையும் மேய்த்துக்கொண்டு ஆடி பாடி கண்ணனுடனேயே வளர்ந்து வந்தார்.
ஒரு முறை நரகாசுரனின் தம்பியான மயிந்தன் என்பவன் தன் அண்ணனைக் கொன்ற கண்ணனைப் பழிவாங்க கோவர்த்தனகிரிக்கு வந்தான். அப்பொழுது அங்கிருந்த பலராமரைக் கண்ணன் என்று எண்ணி, அவனை வம்புக்கிழுத்து, மரங்களை வேரோடு பிடுங்கி அங்கு விளையாடிக் கொண்டிருந்த கோபியர்கள்மீது வீசி பலவாறு துன்புறுத்தினான். இதனால் கோபம் கொண்ட பலராமர் மயிந்தனோடு சண்டையிட்டு அவனைக் கொன்றார். பலராமர் கதாயுத யுத்தக் கலையில் சிறந்து விளங்கினார். அவர் துரியோதனனுக்கும், பீமனுக்கு அக்கலையை சிறப்பாகக் கற்றுக் கொடுத்தார். யாரிடத்திலும் துளியும் பாரபட்சம் பாராட்டினாரில்லை.
ஒரு சமயம் பலராமர், மகரிஷிகளும், ஞானிகளும் கூடி ஆத்ம ஞானம் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடும் நைமிசாரண்யம் என்ற தலத்திற்கு வருகை தந்தார். இத்தலம் இன்றும் உள்ளது. பலராமரைக் கண்டதும், அங்கிருந்த எல்லா முனிவர்களும், துறவிகளும், தவசிரேஷ்டர்களும், பண்டிதர்களும் எழுந்து நின்று மிகவும் மரியாதையுடன் அவரை வரவேற்றார்கள். ஆனால் அங்கிருந்த வியாசரின் சீடரான ரோமஹர்ஷணன் என்பவன் அவருக்குத் தகுந்த மரியாதை செய்யாமல் அமர்ந்திருந்தான். அந்த அவமரியாதையைக் கண்ட பலராமர் மிகவும் கோபமடைந்து, வேதங்களை கற்றுணர்ந்தவர்களுக்கு கர்வம் கூடாதென்று கருதி, அவனை தண்டிக்க விழைந்தார். அதனால் ஒரு தர்ப்பைப் புல்லைப் பிரயோகித்து ரோமஹர்ஷணனைக் கொன்றார். அதனால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆட்பட்ட அவரை, அங்கிருந்த மகரிஷிகள், தோஷம் போக, பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, பலராமரும் அதற்குச் சம்மதித்தார்.
மேலும் அவர்கள் அவர்களுக்கு அங்கு பல துன்பங்களை அளித்து வந்த பலவலன் என்ற அரக்கனைக் கொன்று தங்களைக் காக்க வேண்டுமென்றும் பின்னர் பல தலங்களுக்கும் தீர்த்த யாத்திரை செய்து தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். அவரும் அவ்வாறே பலவலனைக் கொன்று முனிவர்களைக் காத்தார்.
இச்சமயத்தில் கெüரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் மூண்டது. அச்சமயம் இருவரும் அவர் உதவியை நாடினர். ஆனால் அவரோ, தான் அவர்கள் இருவரையும் இரு கண்களாக பாவித்து எந்த பேதமும் பார்க்காமல் கதாயுத பயிற்சியைக் கற்றுக் கொடுத்திருப்பதால், தான் யாராவது ஒருவர் பக்கம் நின்றால் அது அவரது மனசாட்சிக்குத் செய்யும் துரோகம் என்று சொன்னதுடன், அவர்களுக்கு அறிவுரை கூறி, யுத்தத்தை தவிர்க்க நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்காத நிலையில் அந்த யுத்தத்தைக் காண மனமின்றி, தான் முன்னரே தீர்மானித்திருந்தபடி, தீர்த்தயாத்திரை சென்றுவிட்டார். வடக்கிலிருந்து தென்கோடி வரை பாரதத்தின் எல்லா úக்ஷத்திரங்களுக்கும் அவர் சென்றதாக பாகவதம் சொல்கிறது.
அவர் தீர்த்த யாத்திரை முடிந்து வரும்போது, பீமனுக்கும் துரியோதனனுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணனின் குறிப்பறிந்து பீமன் துரியோதனின் தொடையில் கதையால் அடித்துக் கொன்றான். கதாயுத யுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கக் கூடாதென்ற விதியிருந்ததால் அந்த விதியை மீறி செயல்பட்ட பீமனின் மீது மிகுந்த கோபம் கொண்டு, தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த யுத்த நேர்மையை பீமன் மீறிவிட்டான் என்பதால் அவனைக் கொல்லச் சென்றார். ஆனால் அங்கிருந்த கிருஷ்ணர், இந்த யுத்தத்தில் கெüரவர்களால் மீறப்பட்ட பல யுத்த நடைமுறைகளைக் கூறி, பலராமரை சமாதானப்படுத்தினார். ஆனாலும் சமாதானம் அடையாமல் அங்கிருந்து வெளியேறினார்.
மகாபாரத யுத்தமும் முடிந்து, கிருஷ்ணரும், பலராமரும் தங்கள் நாட்டிற்குத் திரும்பியபின், கிருஷ்ணரின் மகனான சாம்பவானின் திருமணத்தின்போது சாம்பவானை ஒரு மன்னன் சிறைப் பிடித்துக் கொண்டு கடலுக்குள் சென்றுவிட, சம்பவானை மீட்பதற்காக பலராமர் தனது கலப்பையின் நுனியினால் பூமியை குத்திப் பிளந்து கொண்டு சென்று சம்பவானை மீட்டு வந்தார்.
குருஷேத்திர போர் முடிந்து தர்மர் பதவியேற்றார். பின்னர் பாண்டவர்கள் கிருஷ்ணருடன் கெüரவர்களின் தாயாரான காந்தாரியைக் காணச் சென்றனர். அப்போது காந்தாரி, தன் பிள்ளைகள் ஒருவர் கூட இல்லாத புத்திர சோகத்தில் இருந்தார். அதனால் இந்த நிலைக்குத் தான் ஆளாவதற்குக் காரணம் கிருஷ்ணனே என்று நினைத்து, தன் குழந்தைகள் எப்படி அழிந்தார்களோ, அதேபோல் யாதவ குலமும் அழியும் என்று சாபமிட, அதேபோல் குருஷேத்திர போர் முடிந்து 36 வருடங்கள் கடந்தபின் யாதவ வம்சத்தினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்தனர். இதைக் கண்ணுற்ற கிருஷ்ணர் மிகுந்த துக்கத்திற்காளானார்.
யாதவகுலம் முடிவுற்றதையும், கிருஷ்ண அவதாரம் முடியப்போவதையும் உணர்ந்த பலராமர் ஒரு விருஷத்தினடியில் தன் உடலை நீக்கி, ஆதிசேஷனாக யோகநிலையில் அமர்ந்தார். அப்பொழுது அங்கு கிருஷ்ணர் வர, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் யோகத்தின் துணையால் கடலில் சென்று மறைந்தார். இவர் தன் அவதாரம் முழுவதிலும் தர்மத்தையும் நேர்மையையுமே கடைபிடித்தார். தமிழகத்தில் பிருந்தாரண்ய தலம் என்றழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் கருவறையிலேயே மூலவர் வேங்கட கிருஷ்ணணுடன் ஒரு கையில் கலப்பை மற்றொரு கையில் வரத முத்திரையுடன் பலராமரைத் தரிசிக்கலாம்.
பலராமரின் அவதாரத் திருநாள் சித்திரை மாதம், வளர்பிறை திருதியை, அட்சய திருதியை ஆகும். இவரை வணங்கினால் தர்ம சிந்தனையும் மனோதைரியமும் தீயவைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலும் கிடைக்கும். 26.4.2020 - பலராமரின் ஜென்ம தினமாகும்.