சுவனம்
இவ்வுலகத்தில் நாம் கண்ணால் காணும் அனைத்து இன்பங்களும் நிழலைப் போன்றது; அது நீங்கிவிடும்.
இவ்வுலகத்தில் நாம் கண்ணால் காணும் அனைத்து இன்பங்களும் நிழலைப் போன்றது; அது நீங்கிவிடும். ஆனால் மறுமையில் சொர்க்கத்தில் மனிதர்கள் அடையப்போகும் இன்பங்கள் நிஜம். அதில் ஒருநாளும் குறைவோ, சலிப்போ ஏற்படாது. மேலும் அவை என்றென்றும் நிலைத்த இன்பங்களாகும்.
மறுமையினுள் நுழையும் முதல் அணியினர் பெüர்ணமி இரவில் ஒளிரும் நிலவைப் போன்று அழகாகத் தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்றாகப் பிரகாசிக்கும் நட்சத்திரம் போன்று காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலம் ஜலம் கழிக்க மாட்டார்கள். மூக்குச் சிந்த மாட்டார்கள். எச்சில் துப்ப மாட்டார்கள்.
அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. சொர்க்கவாசிகளின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (ஹீருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரின் குணமும் ஒரே விதமாகவே அமைந்திருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் அறுபது முழம் உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சொர்க்கத்தில் நற்செயலோ, தீய செயலோ இல்லை. ஒருவரையொருவர் குரோதம் கொள்ளமாட்டார்கள். சொர்க்கவாசிக்கு மரணம் என்பது இல்லை. இவ்வுலகில் எல்லா இன்பங்களிலும் அசிங்கமும், அருவருப்பும் கலந்திருக்கிறது. ஆனால் சுவனத்தில் இவை எதுவும் இல்லாத தூய்மையுடையதாகவும் மேலும் இன்பத்தை அதிகரிக்கக் கூடியதாகவும் இருக்கும். அங்கே எவரும் எதற்கும் நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ""சொர்க்கத்தில் மக்கள் ஒன்று கூடும் சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று அவர்களுடைய முகங்களிலும், ஆடைகளிலும் கஸ்தூரி மணலை வாரி வீசும். உடனே அவர்கள் மென்மேலும் பொலிவு பெறுவார்கள். பிறகு அழகும், பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களுடைய துணைவியர் "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகையும், பொலிவையும் பெற்று விட்டீர்களே!' என்று கூறுவர். அதற்கு அவர்கள் "அல்லாஹுத ஆலாவின் மீதாணையாக நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும், பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்!' என்று கூறுவர்.
இன்னும் சொர்க்கவாசிகள் தமக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று ஆர்வத்துடன் பார்ப்பார்கள். தகுதியில் தமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு ஏக்கத்துடன் அப்படி பார்ப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, நபி தோழர்கள் ""அல்லாஹ்வின் தூதர் அவர்களே... அவை நபிமார்கள் தங்குமிடங்கள்தானே? மற்றவர்கள் அவ்விடத்தை அடைய முடியாதுதானே?'' என்று
கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ""இல்லை... என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக அங்கே தங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதி ஏற்றுக்கொண்ட மக்களே ஆவர்'' எனப் பதிலளித்தார்கள்.
உண்மையில் நாம் ஆசைப்பட தகுதியுடைய விஷயங்கள் இவைதான். எந்த சுகங்கள் நிலைத்திருக்குமோ அந்த சுகங்களின் பக்கமே அல்லாஹ் தீனுல் இஸ்லாத்தின் மூலம் மக்களை அழைக்கிறான். இந்த உயர்ந்த இன்பங்களை அடைய ஈமானும், பொறுமையுமே தகுதியாகும். இவ்வுலகில் நம்மைச் சூழ்ந்துள்ள பல சிற்றின்பங்களை விட்டு ஒதுங்கி, பொறுமையோடு வாழ்ந்து விட்டால் மறுமையில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனத்தை அடையலாம்.
அழிந்து போகும் இவ்வுலகையே அல்லாஹுத ஆலா இத்தனை அழகுடனும், வசதிகளுடனும் படைத்திருக்கிறான் என்றால், மறுமையில் அழிவில்லாத அந்த சொர்க்கத்தை எந்த அளவு உயர்வாகவும், தூய்மையாகவும் படைத்து வைத்திருப்பான். சொர்க்கத்தின் உண்மையான இன்பங்களை எந்த வார்த்தையும் விளக்கிச் சொல்லிவிட முடியாது.
எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எவரின் கற்பனையிலும் தோன்றியிராத வகையில் அல்லாஹ் சொர்க்கத்தைப் படைத்திருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் அருளின் மீதுள்ள நம்பிக்கையைக் கொண்டு இவ்வுலகின் சிரமங்களைச் சகித்து, ஆசைகளை விட்டு அகன்று, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி நம் குணாதிசயங்களை அமைத்துக் கொள்வோமேயானால் இன்ஷா அல்லாஹ் சொர்க்கம் செல்லலாம்.
-ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்