வெள்ளிமணி

சீராக வேண்டிய ஆதனூர் சிவனாலயம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் கோமல் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது ஆதனூர். இக்கிராமத்தில் உள்ள மிகப்பழைமையான சிவனாலயத்தின் பெருமையை அறிவோம்!

எஸ். வெட்கட்ராமன்


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் கோமல் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது ஆதனூர். இக்கிராமத்தில் உள்ள மிகப்பழைமையான சிவனாலயத்தின் பெருமையை அறிவோம்!

பெயர்க்காரணம்: அகத்திய மாமுனிவர் வழிபட்டதால் இறைவன் "அகஸ்தீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டும், அகிலத்தைக் காத்து ரட்சிக்க அகத்தியர் வேண்டியபடியால் அம்பிகை "அகிலாண்டேஸ்வரி' என்று திருநாமம் கொண்டும் திகழ்கின்றனர்.

தலவரலாறு:  பல்லாண்டுகளுக்கு முன், சனீஸ்வர பகவான் சோதனைக்கு ஆளான நந்தன் என்ற பெயர் கொண்ட விவசாயி மிகவும் துயருற்ற நிலையில் இவ்வூர் இறைவனிடம் மனமுருகி வழிபடுகின்றான். ஈசன் தம்பதி சமேதராய் அவனுக்கு காட்சியளித்து அருளியதாகவும், அதனால் சனீஸ்வரனும் நந்தனை விட்டு விலகி ஆதனூருக்கு அருகே வடமேற்கில் உள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திற்குச் சென்று அங்குள்ள அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நிதிகொண்டு இன்றளவும் பக்தர்களுக்கு அருளுவதாகவும் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தீர்த்த சிறப்பு: இந்த ஊர் வெண்ணாற்றின் கிளை நதியான ஹரிச்சந்திரா நதிக்கரையில் அமையப்பெற்றுள்ளது சிறப்பு. இக்கோயில் குளம் சூர்ய புஷ்கரணி. ஹரிச்சந்திர மகராஜன் நீராடி தன் பாவங்கள் நீங்கப் பெற்றதால் "ஹரிச்சந்திர தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகின்றது.

பரிகாரச் சிறப்பு: வைத்தீஸ்வரன் கோயிலில் இருப்பது போன்றே சக்திமிகுந்த வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி இக்கோயிலிலும் மிகுந்த சான்னியத்துடன் சந்நிதி கொண்டுள்ளார். அவரை வேண்டிக்கொண்டு கண் உபாதை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணங்களுக்காக பரிகாரம் செய்து குணம் அடைந்த பக்தர்கள் ஏராளம்.

திருப்பணி: காலப்போக்கில் வழிபாடு பராமரிப்பு குன்றி, விழாக்கள் நின்று போய், இயற்கையின் ஆளுமைக்கு உட்பட்டு மிகவும் சிதிலமடைந்த நிலைக்கு ஆலயம் தள்ளப்பட்டு விட்டது. மிகுந்த பிரயாசையுடன் ஒரு கால பூஜை மட்டும் செய்யப்படுகிறது. மண் மேடிட்டுப் போன கோயில் வளாகத்தைச் சீர் செய்து, சிறிய அளவில் அனைத்து சந்நிதிகளுடன் ஒரு சிறிய அளவிலான ஆலயம் அமைவதற்கு பெரு முயற்சியை கிராம வாசிகள், வெளியூர் அன்பர்கள் ஆதரவுடன் மேற்கொண்டுள்ளனர். ஆதனூர் ஆலய திருப்பணி வேலைகளுக்கு பக்தர்களின் ஆதரவு மிகவும் தேவையாக உள்ளது. எவ்வகைகளினாலும் திருப்பணிகளில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: 9940053289 / 9629270956.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT