முகப்பு
வெள்ளிமணி

நாவின் தீமை 

ஈமான் என்பது புலனடக்கம் கொள்வதில் நிறைவாகிறது. இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள நாவு, கண், கை கால்கள், செவி இன்னும் அனைத்து புலன்களுக்கும் இறை நம்பிக்கைதான் வழிகாட்டியாக இருக்க

பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:28 PM


ஈமான் என்பது புலனடக்கம் கொள்வதில் நிறைவாகிறது. இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள நாவு, கண், கை கால்கள், செவி இன்னும் அனைத்து புலன்களுக்கும் இறை நம்பிக்கைதான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மனம் விரும்புவதற்குத் துணையாக புலன்களைப் பயன்படுத்தினால் ஈருலகத்திலும் தீமையே ஏற்படும். ஒவ்வொரு காரியத்திலும் புலன்களை அல்லாஹ்வின் தூதரின் கட்டளைப்படிச் செயல்படுத்த வேண்டும். அதைத் தவற விடுவதால் பெரும் நஷ்டமும், கவலையும் ஏற்படும்.
புறம் என்பது ஒருவரின் குறைகளைச் சுட்டிக் காட்டி பிறரிடம் கூறுவதாகும். ஒவ்வொருவரிடமும் நிறைகளும் குறைகளும் கலந்தே இருக்கின்றன. குறை நிறை இவ்விரண்டுக்கும் தண்டனையும் நன்மையும் அளிப்பது இறைவனின் வேலை. அது நமது வேலையல்ல. 
கேள்விப்படும் ஒவ்வொரு பேச்சையும் அடுத்தவரிடம் கொண்டு சேர்க்கும் பழக்கம் மிகத் தீய பழக்கமாகும். ஒவ்வொரு விஷயத்தையும் பேசும்போது அதனால் தனக்கு நன்மையா? அல்லது தீமையா? என யோசிக்காமல் பேசுவது மறுமையில் நஷ்டத்தில் ஆழ்த்தி விடும். பிறர் குறை பேசுபவரும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவரும் ஆகிய இவர்கள் மக்கள் மத்தியில் கண்ணியமற்றவர்களாக ஆகிவிடுவர்.
நல்ல மனிதரைக் குறித்து அவதூறு பேசுவதால், அம்மனிதரின் மனம் வேதனை அடையும். அவதூறு பேசியவரின் தோளில் அந்த நல்ல மனிதர் மனவேதனையோடு அமர்ந்து முனங்கிக் கொண்டிருப்பார். இந்நிலையிலேயே மறுமையில் அவதூறு பேசியவர் அல்லாஹ்வை சந்திப்பார் என ஹதீஸில் வந்துள்ளது. 
ஒருவர் பிறரைக் குறை சொல்கிறார் எனில், அவர் நற்செயல்கள் செய்யாதவர் என்று விளங்கிக் கொள். ஏனெனில், அல்லாஹ்வுக்காக நற்செயல் செய்பவர் பிறரது குற்றங்குறைகளைப் பேசி அதை அழித்துக் கொள்ள மாட்டார். இமாம் ஹஸன் பஸரி (ரஹ்).
பல விஷயங்களை யூகத்தின் அடிப்படையிலேயே பேசுகிறோம். எதனைக் குறித்து முழுமையாக அறியவில்லையோ அதைக் குறித்து பேசாது ஒதுங்கிவிட வேண்டும். எதற்கெடுத்தாலும் சர்ச்சை செய்து பேசக்கூடாது. பெற்றோர், வயதான பெரியோர்கள், ஆசிரியர்கள் ஆகிய இவர்களிடம் வழக்காடுவது போன்று அடித்துப் பேசுதல் ஒழுக்கக் குறைவாகும். பேச்சில் விட்டுக்கொடுத்துப் பேசுதல் உயர் பண்பாகும். 
நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனாரின் மகனார் இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது வீட்டார் அழ ஆரம்பித்தனர். அப்போது ஒரு ஸஹாபி "இப்னு ஹாரிஸ் இஸ்லாத்தைத் தழுவியதில் இருந்து இதுவரை ஒருபோதும் நாவால் எந்தத் தவறான வார்த்தையையும் பேசியதில்லை. இன்னும் வீண் பேச்சுக்களையும் பேசியதில்லை; மேலும், உடலால் எந்தக் குற்றமான செயலையும் செய்யாத அப்படிப்பட்டவருக்காக அழாதீர்கள். ஏனெனில், மகிழ்ச்சியின் பக்கம் சென்றிருக்கிறார்' என்று கூறினார்கள். 
ஞானமேதை லுக்மான் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: வாய்மூடி மெளனமாக இருப்பது இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும். எந்த மனிதனுடைய நாவு அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லையோ, அவன் பெருத்த கேடுகளை அடைவான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.