"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...'
(பாடல் 724)
உடல் அழிந்து விட்டால், உயிரும் உடலை விட்டு நீங்கி விடும்.பின், உயிருக்கு உற்ற துணையான, மெய்ஞ்ஞானமாகிய பரம்பொருளை சேர முடியாது. அதனால் உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்பது பொருள்.
எல்லோரும் உடம்பை சதைப் பிண்டம், உடல் தேவையற்ற பாரம் என்றே பாடியிருக்கிறார்கள்.
அழுகணிச் சித்தர்,
"ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ...'
என, உடம்பை துர்நாற்றம் வீசுகிற "ஊற்றைச் சடலம்' எனக் குறிப்பிட்டார்.
ஆனால், திருமூலரோ "உடலைப் பாதுகாக்க வேண்டும்' என்கிறார்.
அடுத்த பாடலில்,
"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே'
(பாடல் 725)
எனப் பாடுகிறார்.
இந்த உடம்பை பாவச்சுமை, இழுக்கானது என நினைத்திருந்தேன். இந்த உடம்பில் பரம்பொருள் இருப்பதை அறிந்தேன். உடம்புக்குள் உத்தமனாகிய பரம்பொருள் கோயில் கொண்டிருப்பதால், உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வருகிறேன் என்கிறார்.
நம் உடம்பை நல்லபடியாக வளர்த்து, பேணிப் பாதுகாத்தல் அவசியம். ஏனெனில் அது இறைவன் வசிக்கும் இடம்.
உடம்பிற்கு "மெய்' என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன காரணம்?
சாலையில் வாழைப்பழ வியாபாரி தலையில் வாழைப்பழங்களைச் சுமந்தபடி செல்கிறார். அவரை "வாழைப்பழம்... இங்க வாங்க' என அழைப்போம்... கீரை சுமந்து விற்பவரை அழைக்க வேண்டும் எனில், "கீரை....' எனக் குரல் கொடுத்து அழைப்போம். ஒருவர் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாரோ, அதைக் கொண்டு அவரை அழைப்பது வழக்கம். நம் உடல், இறைவனாகிய மெய்ப்பொருளைச் சுமந்து கொண்டிருப்பதால், இதற்கு "மெய்' என்று பெயர்.
கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்...
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'
இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடம்பில் நோய் வந்தால், அது மனத்தையும் சேர்ந்து பாதிக்கும்.
உடலைப் பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி ஆகையால், வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
"உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி...'
என வேண்டுகிறார்.
உடம்பை வளர்ப்பது என்றால் நன்றாகத் தீனி போட்டு வளர்ப்பது, விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வது என்று பொருள் அல்ல... இறைவனின் வசிப்பிடம் என்பதை உணர்ந்து, அதைத் தவறாக பயன் படுத்தாமல், நல்ல நெறிகளின் படி வாழ்வது, ஆரோக்கியமாக வைத்திருப்பது என்றே பொருள்.
இலக்கியங்கள் ஒவ்வொரு முறையும் புதிய பொருள் தருபவை. குறிப்பாக பக்தி இலக்கியங்கள், படிப்பவர்கள் அனைவரின் மனநிலைக்குமான மருந்தை, பதிலைத் தருபவை.
இள வயதில் ஒருவர், திருமந்திரத்தின் இப்பாடலைப் படித்து விட்டு, உடம்பை ஆரோக்கியமாகவும், நல் வழியிலும் வளர்த்து, உயிரை வளர்க்கலாம்.
ஆனால், மரணத் தருவாயில் இருக்கும் ஒருவர், இப்பாடலைப் படிக்கும் போது, இனிமேல் எப்படி என் உடலை ஆரோக்கியமாக வைத்து உயிரை வளர்ப்பது ? முன்பே தெரிந்திருக்கக் கூடாதா என வருத்தப்படலாம் இல்லையா ?
அவர்களுக்கும் இந்தப் பாடல் விடை சொல்கிறது...
"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...'
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன், என் தோழி ஒருத்தி தஞ்சாவூரில் அவள் பகுதியில் பிரபலமான "அக்கா வீட்டுச் சாப்பாடு' குறித்துச் சொன்னாள்.
"அக்கா வீட்டுச் சாப்பாடு' பின்புலம் சுவாரஸ்மானது...
அடுத்தடுத்த வருடங்களில், கணவரையும், குழந்தையையும் இழந்த ஒரு பெண். மிகுந்த மனத்துயரில் அவருக்கு நாளுக்கு நாள் உடல் நலிவடைகிறது. "அதிக நாள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மருத்துவர்கள் சொல்ல, மீதி நாட்களை படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம்.
துணைக்கு, மகளிர் காப்பகத்தில் இருந்து ஒரு பெண்ணை வரவழைக்கிறார். அந்த பணிப்பெண்ணைப் போலவே, பலரும் தாய், தந்தை ஆதரவு இல்லாமல் காப்பகத்தில் இருப்பதை அறிந்த அந்த நோயாளிப் பெண், காப்பகத்தில் உள்ள பெண்களை அடிக்கடி தன் வீட்டிற்கு வரவைத்து, அவர்களுக்குத் தன் சேமிப்பில் உள்ள பணத்தைக் கொண்டு, சத்தான உணவு, பழங்கள், நல்ல உடைகள், மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருகிறார்.
அவருக்கு ஹிந்தி மொழி தெரியும். ஆகையால், உடல் நிலை முடியாத போதும் சுற்றுப்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் இலவசமாக ஹிந்தி கற்றுத் தர ஆரம்பித்தார்.
குழந்தைகளை வரவழைப்பதற்காக, வகுப்பிற்கு வரும் குழந்தைகளுக்கு இரவு உணவையும் வழங்க ஆரம்பித்தார். சில குழந்தைகள் வீட்டிலிருந்து பாத்திரம் கொண்டு வந்து, தங்கள் பெற்றோருக்கும் உணவு எடுத்துச் சென்றனர். சமைக்கும் பொறுப்பு பணிப்பெண்ணுடையது.
தன் வாழ்வின் இறுதிக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க விரும்பி, ஏழைக் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இலவசமாக சாப்பாடு தருவது, உடல் நிலை முடியாத போது மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது இவற்றைச் செய்து வந்தார் அந்தச் சகோதரி.
அவரது உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்தது... பணிப்பெண் உதவியில்லாமலே நடக்க ஆரம்பித்தவர், நன்கு உடல் நலம் தேறி, படிக்க வரும் குழந்தைகளுக்காக அவரே சமைக்கவும் ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து அந்த பணியைச் செய்து வந்தவர் முற்றிலுமாகக் குணமடைந்து, பல ஆண்டுகள் தன் சேவையைத் தொடர்ந்தார்.
மரணத்திற்குத் தேதி குறிக்கப்பட்ட ஒருவர், முற்றிலும் குணமடைந்து ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தார் எனில் என்ன காரணம் ?
அவரிடம் உதவி பெற்றவர்கள் பலரும் அவருக்கு நன்றி சொல்லச் சொல்ல, அவர் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியே அவருக்கு மருந்தாகி, அவரைக் குணப்படுத்த ஆரம்பித்தது...
"அக்கா வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டேன்', "அக்கா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுறோம்' எனக் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் சொல்லச் சொல்ல... "நாளை அவர்களுக்கு என்ன சமைத்துக் கொடுக்கலாம்?' என ஒவ்வொரு நாளும் யோசித்தார். பசியாறிய குழந்தைகளின் முகத்தில் அரும்பிய சிரிப்பில், தன் உடல் ரணம் குறைவதை உணர்ந்தார். விரைவிலேயே முழுமையாகக் குணமடைந்தார்.
இளம் வயதில், இந்த திருமந்திரப் பாடலைப் படித்து, ஆரோக்கியமாக, நல் வழியில் உடலை வளர்த்து, அதன் மூலம் உயிரை, ஆயுளை அதிகரிக்கலாம். ஒருவேளை, அந்திம காலத்தில்தான் இப்பாடலைப் படிக்க நேர்கிறது எனில்... ஏழைகளுக்கு உணவு கொடுத்து, கல்வி கொடுத்து, நோயாளிகளுக்கு மருந்து வாங்கிக் கொடுத்து, அவர்கள் உடம்பை ஆரோக்கியமாக வளர்த்தால்... உங்கள் உயிர் வளரும், ஆயுள் வளரும் என்பதையே மேற்கூறிய சம்பவம் உணர்த்துகிறது.
"உடம்பை வளர்ப்போம்...உயிர் வளர்ப்போம்...' அதுவே திருமூலர் நமக்கு வலியுறுத்திச் சொல்லும் திருமந்திரம்.
-தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.