முகப்பு
வெள்ளிமணி

புலம் பெயர்ந்த பெருமாள்!

பொதுவாக வைணவத் தலங்கள் அனைத்தும் திருமாலும், திருமகளும் உறையும் இடமாகக் கொண்டு திருப்பதிகள் என அழைக்கப்படுவது மரபு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:


பொதுவாக வைணவத் தலங்கள் அனைத்தும் திருமாலும், திருமகளும் உறையும் இடமாகக் கொண்டு திருப்பதிகள் என அழைக்கப்படுவது மரபு. ஆனால் மலையப்ப சுவாமி மலையிலிருந்து இறங்கி, சமவெளிக்குப் புலம் பெயர்ந்து அடியார்களுக்கு அருள் செய்து வரும் திருத்தலம் இன்னம்பூர் ஆகும். அதனால் திருப்பதி தலமாகவே கருதப்படுகிறது. 
கும்பகோணம் - திருவையாறு சாலையில் சுவாமி மலைக்கு முன்பு புளியஞ்சேரி என்ற இடத்திலிருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவிலுள்ளது இன்னம்பூர் (பேருந்து 
எண்: 6).
தலச் சிறப்பு: இனன்புரி அதாவது சூரியபுரி என்ற பெயர் மருவி "இன்னம்பூர்' என்று அழைக்கப்படுகிறது. காவிரிப் படுகையில் செழித்துள்ள இக்கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற எழுத்தறிநாதேஸ்வரர் சிவன் கோயில், ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில், ஐயனார் கோயில், காளி கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவை வழிபாட்டில் உள்ளன. அனைத்துமே காலத்தினால் பழமையானது, புராதனமானது.
இதில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தனிச் சிறப்பு வாய்ந்தது. சூரியனுக்கும், பால ஆஞ்சநேயருக்கும் பெருமாள் இத்திருத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாறு. 
விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் இறுதி காலத்தில், அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட ஆலயங்களில் திருப்பதியும் ஒன்று. இத்தலத்தை அவர்கள் கைப்பற்ற வந்த போது திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்தானிகராயிருந்த தோழப்பர் என அழைக்கப்பட்ட தாதாச்சாரியார் அங்குள்ள உற்சவர் விக்கிரகங்களைப் பாதுகாக்க விரும்பி சுற்றுமுள்ள காடுகளில் ஒளித்து வைத்தார். 
மலைக்கோயிலில் (திருமலை) பூஜையிலிருந்த பஞ்ச மூர்த்திகளில் சிறிய மூர்த்தியை உபய நாச்சியார்களோடு நாவல்பாக்கம் என்ற கிராமத்திற்கு அனுப்பி அங்கு பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். இதனையறிந்த வீரவல்லி வம்சத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரியார் என்பவர், அப்போது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரிடம் அனுமதி பெற்று அந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் மூர்த்தியை இன்னம்பூரில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தினார். இத்தகவல் ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 
பின்பு காலப்போக்கில் இதர சந்நிதிகள் ஏற்பட்டு சம்ப்ரோஷண வைபவங்கள் நடந்தேறின. கடைசியாக 2012-இல் சம்ப்ரோஷணம் நடைபெற்றது. தலவிருட்சமாக நெல்லி மரம் உள்ளது.
திருப்பதியில் மேற்கொள்ளப்படும் வைகானஸ ஆகம முறை இங்கும் பின்பற்றப்படுகிறது. பிரதி மாதம் சிரவண தீபம் ஏற்றுதல், ஸ்ரீராம நவமி, ஆடி வெள்ளி, நவராத்திரி உற்சவம், கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்கள், திருக்கார்த்திகை, வனபோஜன உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஹனுமன் ஜயந்தி, ரதசப்தமி, ஆழ்வார்கள், ஆசாரியார்கள் நட்சத்திர தினங்கள், தெப்பல் உற்சவம் என அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. 
திருப்பதியிலிருந்து உற்சவ மூர்த்தி பிரதிஷ்டையான பிறகு ஆலய சாந்நித்யம் அதிகம் கூடியுள்ளது. ஸ்ரீநிவாசப் பெருமாள் மிகவும் வரப்பிரசாதி. 
வேண்டிக் கொண்டதை நிறைவேற்றிக் கொடுப்பவர். திருமணமாகாதவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கு அதனை நிறைவேறச் செய்பவர். 
பிரார்த்தனை, கல்யாண உற்சவம் செய்பவர்களும் உண்டு. இவ்வாலயத்தில் அபூர்வமாக அஷ்டநாகங்களில் அநந்தன், வாசுகி இருவரும் சேர்ந்தாற்போல பிரதிஷ்டையாகி உள்ளனர். அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்க இச்சந்நிதியில் பரிகார பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
திருக்கோயில் பராமரிப்பு மற்றும் உற்சவங்கள் முதலியன உள்ளூர்வாசிகளுடன் இணைந்து ஸ்ரீஸ்ரீநிவாஸ சத்சங்கம் என்ற டிரஸ்ட் மூலம் செவ்வனே நடைபெறுகின்றது. இந்து பத்திரிகை குடும்பத்தினர் இந்த புராதன கோயிலின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதன் நிறுவனர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் இன்னம்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். 
ஆலய பராமரிப்புக்கான சிறப்பு விருது 1970-ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. திருக்குடந்தை ஆண்டவன் சுவாமிகள் மற்றும் பெரியோர்கள் விஜயம் செய்து மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
தென்னந்தோப்புகளின் நடுவே அமையப்பெற்று, மால்மருகனாம் முருகனின் வாகனமான மயில்கள் எப்பொழுதும் உலாவிக் கொண்டிருக்கும் இத்தலத்திற்கு அவசியம் சென்று பெருமாளையும், தாயாரையும் கண்குளிர தரிசித்து இகபர சுகங்களை வேண்டுவோமாக. திருமலையானை திருக்குடந்தை அருகே தரிசிக்க இது ஓர் அரிய வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு: 9994029242 / 96008 23071.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.