முகப்பு
வெள்ளிமணி

விருந்தோம்பல்

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ""எனக்குத் தாங்க முடியாத பசி ஏற்பட்டுள்ளது'' என்று முறையிட்டார்.  

Updated On : 27 அக்டோபர், 2020 at 10:19 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ""எனக்குத் தாங்க முடியாத பசி ஏற்பட்டுள்ளது'' என்று முறையிட்டார்.  நபி (ஸல்) அவர்கள், தம் துணைவியரிடம் ஆளனுப்பி ""அவர்களிடம் ஏதேனும் உணவு இருக்கிறதா?'' என்று கேட்டு வரச் சொன்னார்கள்.  

சென்றவர் திருப்பி வந்து, ""அவர்களிடம் உணவு ஏதும் இல்லை'' என்று பதிலளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், தங்களோடு இருந்த தோழர்களிடம், ""இன்றிரவு இவருக்கு விருந்தளிப்பவர் உண்டா?'' எனக் கேட்டார்கள்.  அப்போது அன்சாரி தோழர்களில் ஒருவர் எழுந்து, ""நான் இவரை என் விருந்தாளியாக வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்'' என்று கூறினார்.
பிறகு அன்சாரி தோழர் விருந்தாளியைத் தன்னோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.  அன்சாரி தோழர் தன் மனைவியிடம், ""நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்.  அவருக்காக உணவு இருக்கிறதா?'' என்று வினவினார்.  அதற்கு அவர் மனைவி, ""அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகள் உண்பதற்காக உள்ள உணவைத் தவிர வேறு என்னிடம் இல்லை'' என்று பதிலளித்துள்ளார்.
அதற்கு அன்சாரி தோழர், ""நீ பிள்ளைகளை எப்படியாவது சமாதானம் செய்து தூங்க வைத்துவிடு.  உன்னிடம் இருக்கும் உணவைக் கொண்டு வந்து வைத்துவிடு.  நீ வீட்டில் உள்ள விளக்கைச் சரி செய்வது போல் பாசாங்கு செய்து அதை அணைத்துவிடு.  நான் அவரை மட்டும் உண்ணச் செய்து விடுகிறேன்.  இன்றிரவு நாம் வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வோம்'' என்று கூறினார்.
பிறகு, விருந்தாளி வீட்டினுள் அமர வைக்கப்பட்டார். இருவரும் எதிரெதிரில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் சிறிதளவு உணவு வைக்கப்பட்டிருந்தது. 
அவர் மனைவி விளக்கைச் சரி செய்வதுபோல் அதை அணைத்து, வீட்டை இருட்டாக்கி விட்டார்.  
அன்சாரி தோழர் தாமும் சாப்பிடுவதுபோல் பாவனை செய்து கொண்டே, விருந்தாளியை அங்கிருந்த உணவு முழுவதையும் சாப்பிட வைத்துவிட்டார். 
மறுநாள் காலை அன்சாரி தோழர் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரி தோழரை மகிழ்வுடன் வரவேற்று, ""நேற்றிரவு நீங்கள் விருந்தாளியுடன் நடந்து கொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் மகிழ்ந்தான்'' என்று சொன்னார்கள்.  அப்போது குர்ஆனில் உள்ள இந்த "ஆயத்' இறங்கியது.
ஸஹாபாக்கள் தங்களுடைய தேவையைவிட பிறருடைய தேவைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  அவர்களின் இதுபோன்ற உன்னதமான பண்புகளே அவர்கள் இஸ்லாத்தில் இருந்ததற்கான அடையாளமுள்ள செயல்களாக இருந்தன.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் கூறுவான்; "ஆதத்தின் மகனே! நான் உன்னிடம் உணவளிக்கும்படி கேட்டேன்;  ஆனால் நீ உணவளிக்கவில்லை.  
அதற்கு மனிதன் கூறுவான்; "என் அதிபதியே! அனைவரையும் பராமரித்துக் காத்து, வளர்ப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்?' அப்பொழுது இறைவன் கூறுவான் "உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் உணவளிக்கும்படிக் கேட்டான்.  
ஆனால் நீ உணவளிக்கவில்லை. நீ அவனுக்கு உணவளித்திருந்தால், நீ அளித்த உணவை என்னிடம் நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?' என்று இறைவன் கூறுவான்..!'  

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.