பிறவிப் பெருங்கடலில் கரைசேர உதவவும், முற்பிறவி வினைகளை அறுத்து இறைவனிடம் சேரவும் உதவுவது இறைவழிபாடாகும். ஆனால், இந்தப் பிறவியிலேயே நன்மைதரும் தெய்வமாக விளங்கும் அதிசயக் கோயில், மதுரை மாநகரின் மையப்புள்ளியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ளது "இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்' என்பது சிலர் மட்டுமே அறிந்த செய்தியாகும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் மன்னராகப் பதவியேற்குமுன் சிவ வழிபாடு செய்த லிங்கமும் இங்கே உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
தல வரலாறு: மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனின் மகளாகப் அவதரித்தவர் மீனாட்சி. பார்வதியின் அம்சமான மீனாட்சி, தன் தந்தையின் காலத்திற்குப் பின் மதுரையை ஆட்சி புரிகிறாள். மீனாட்சியை மணம் புரியும் மணமகனாக வருபவர் சுந்தரேஸ்வரர் எனும் சிவபெருமான்.
மாப்பிள்ளையான சுந்தரேஸ்வரர், மன்னராகப் பொறுப்புக்கு வருகிறார். ஆட்சி பீடத்தில் அமரும் முன்னர் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது நியதியாகும். அதனால் சுந்தரேஸ்வரர், தன் ஆத்மாவை சிவலிங்கமாக்கி, பூஜை செய்கிறார். அதன் பின்பு மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்கிறது தலபுராணம்.
சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மேற்கு முகமாய் சிவபூஜை செய்கின்றனர். சிற்ப வடிவில் இருவரையும் காண்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கே அருளிய லிங்கமாகத் திகழ்வதால், இவருக்கு "இம்மையிலும் நன்மை தருவார்' என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
இவ்வாலய முகப்பு வாயில் மேற்கு முகமாய் அமைந்துள்ளது. இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்றாக அமைந்துள்ளன. கல்லாடம், பரிபாடல் மற்றும் திருவிளையாடல் புராணம் எனப் பல்வேறு இலக்கியங்களில் இத்தலத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
சுவாமி சந்நிதியின் வலதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கிய அன்னை நடுவூர்நாயகி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னைக்கு மத்தியபுரி அம்மன் என்ற திருநாமமும் உள்ளது.
தலமரமாக பத்து இலைகள் கொண்ட தசதள வில்வமும், பெயர் அறியப்படாத திருக்குளமும் தீர்த்தமாக அமைந்துள்ளன.
இக்கோயிலில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். சிவகங்கை சமஸ்தானத்தின் 84 திருக்கோயில்களில் ஒன்றாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் பரம்பரை அறங்காவலராக ராணி சாஹுபா கெளரி வல்லப டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் உள்ளார். இத்தலத்து இறைவனை பூஜை செய்த பின், சுந்தரேஸ்வரர் மன்னராகப் பதவியேற்றதால், பதவியுயர்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார்.
மேலும், இத்தலத்து காலபைரவர் காரியசித்திக்கும், ஆயுள்தோஷம் நீங்கவும் பக்தர்களின் நம்பிக்கையுடன் வணங்கப்படுகிறார். செய்வினை தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது.
முருகனுக்கு பூக்குழி விழா அம்மன் ஆலயங்களில் மட்டுமே பூக்குழி எனும் தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். இத்திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்திற்கு மறுநாள் பூக்குழி விழா நடத்தப்படுவது அரிதான ஒன்றாகும். பக்தர்கள் இந்த பூக்குழியில் இறங்க 48 நாள்கள் விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைவிடம்: மதுரை மாநகரின் மேலமாசி வீதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
- பனையபுரம் அதியமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.