முகப்பு
வெள்ளிமணி

அனந்த பத்மநாப ஈஸ்வரன்!

முக்தி தரும் ஏழு மோட்சபுரிகளுள் ஒன்றாகத் திகழ்ந்து, "நகரேஷு காஞ்சி' என்று புகழப்படுவதுமான ஸ்ரீகாமாட்சி தேவியின்..

Updated On : 29 ஜனவரி, 2021 at 6:37 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:54 AM

முக்தி தரும் ஏழு மோட்சபுரிகளுள் ஒன்றாகத் திகழ்ந்து, "நகரேஷு காஞ்சி' என்று புகழப்படுவதுமான ஸ்ரீகாமாட்சி தேவியின் அருள்வெள்ளம் பெருகிப் பாயும் காஞ்சிமாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் வழிபாட்டில் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் "அனந்த பத்மநாபேசம்' எனப்படும் ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர் ஆலயம். பெரிய காஞ்சிபுரம் லிங்கப்ப ஐயர் தெருவில் இருக்கும் இதன் சிறப்பை அறிவோம்:

அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களும் காஞ்சியின் எட்டு திசைகளிலும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்ததாக காஞ்சி புராணம் தெரிவிக்கிறது. அதில் அனந்தன் பூஜித்தது "அனந்த பத்மநாபேசம்' ஆகும். 

அனந்தனின் பக்தியைக் கண்ட மகா விஷ்ணு மகிழ்ந்து அவரும் இத்தலத்திலேயே எழுந்தருளி அனந்தன் மேல் சயனம் கொண்டு சிவபூஜை செய்தாராம். எனவே இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரன் "அனந்த பத்மநாபேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

Advertisement

அனந்தன் பூஜித்து வழிபட்ட சிவலிங்கமானது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பூமிக்கடியில் புதைந்துவிட்டது. அந்த இடத்தில் பதஞ்சலி ஐயர் என்பவர் வீடுகட்டி வசித்து வந்தார். இந்நிலையில், அவ்விடத்தில் நாகங்களின் நடமாட்டங்கள் அதிக அளவில் இருந்தது. வீட்டு உரிமையாளர் பயந்து செய்வதறியாது திகைத்தார். 

அப்பொழுது ஒருநாள் காஞ்சி மகா சுவாமிகளின் கனவில் அனந்தன் தோன்றி, தான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் அந்த வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைந்திருப்பதை உணர்த்தியது. உடனே மகா பெரியவரின் உத்தரவின்படி செயல்பட, புதையுண்ட சிவலிங்கம் வெளிப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, அவர் முயற்சியாலே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டு, அவர் திருக்கரத்தினால் முதல் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. சிவராத்திரி புண்ணிய காலத்தில் காஞ்சியின் மூன்று பீடாதிபதிகளுமே இங்கு வந்து தரிசனம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

தற்போது, ஜகத்குரு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடனும், வழிகாட்டுதலுடனும், இவ்வாலயத் திருப்பணிகள் சென்னை ஸ்ரீமஹாலட்சுமி சாரிடபிள் டிரஸ்டைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியன் மூலம் மேற்கொள்ளப்பட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஅனந்த பத்மநாப ஈஸ்வரர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பிப்ரவரி 3}ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. 

கும்பாபிஷேகத்திற்கு உண்டான புனித நீரானது பிப். 1}ஆம் தேதி கச்சபேஸ்வரர் கோயிலிலிருந்து மேளதாள வேத கோஷ்டத்துடன் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. மூல ஸ்தானத்தில் பாம்பணை மேல் பள்ளி கொண்டவாறே பரந்தாமன், பரமனை பூஜிக்கும் அழகைக்  கண்குளிர தரிசிக்க இந்தக் கும்பாபிஷேக வைபவம் பக்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாகும். 

தொடர்புக்கு: 9840053289.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.