முகப்பு
வெள்ளிமணி

"எழுந்திரு பறவையே!'

ராவணன் சீதாப்பிராட்டியை கடத்திச் சென்றபோது ராவணனுடன் மோதி காயமடைந்து கீழே விழுந்து கிடந்த ஜடாயுவை "எழுந்திரு பறவையே!'

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:


ராவணன் சீதாப்பிராட்டியை கடத்திச் சென்றபோது ராவணனுடன் மோதி காயமடைந்து கீழே விழுந்து கிடந்த ஜடாயுவை "எழுந்திரு பறவையே!' என ராமபிரான் அழைத்த தலமே ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள "லே பாக்ஷி' ஆகும்.  தெலுங்கில் "லே பாக்ஷி' என்றால் தமிழில் "எழுந்திரு பறவையே!' எனப் பொருளாகும்.

அற்புதமான கலைநுட்பம் மிக்க சிற்பங்களைத் தன்வசம் கொண்டுள்ள இக்கோயிலில் வீரபத்திர சுவாமி மூலவராகத் திகழ்கிறார். விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் மொத்தம் 70 கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன.

"குர்மா சைலம்' என்ற குன்றின் மீது கி.பி. 1583-இல் விருபண்ணா, வீரண்ணா என்ற இரு சகோதரர்கள் இக்கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் விஜயநகர அரசர்களிடம் சேவை புரிந்தவர்களாவர். 

ராமாயணத்தில் முக்கிய இடம்: இத்தலத்துக்கு ராமாயணத்தில் முக்கிய இடம் உள்ளது. சீதாப்பிராட்டியை இலங்கைக்கு ராவணன் கடத்திச் சென்ற போது, ஜடாயு அதைத் தடுப்பதற்காகப் போரிட்டார். எனினும் ஜடாயுவை வெட்டி வீழ்த்தி ராவணன் சென்று விட்டான். 

பின்னர் அங்கு ராமர் வந்து பார்த்த போது, கீழே விழுந்து கிடந்த ஜடாயுவை நோக்கி ""லே பாக்ஷி (எழுந்திரு பறவையே!)'' எனக் கூறினார். உடனே ஜடாயு உயிர் பெற்று எழுந்தது. 

இக்கோயிலில் ஜடாயு விழுந்த இடத்தில் மிகப்பெரிய கருடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தொங்கும் தூண்: இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள லேபாக்ஷி தலம் சிற்பங்களின் பொக்கிஷமாக திகழ்கிறது.  கோயிலின் உள்புறம் பல்வேறு சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் உள்ளன. அவற்றில் பார்வையாளர்களை மிகவும் கவர்வது தொங்கும் தூணாகும். எந்தப் பிடிமானமும் இல்லாமல் இத்தூண் நிறுவப்பட்டுள்ளது. அதன் அடிப்புறத்தில் ஒரு துணி அல்லது காகிதத்தை நுழைத்து எடுக்கும் அளவுக்கு இடைவெளி உள்ளது. தொங்கும் தூண் அக்கால கட்டடக்கலை தொழில் நுட்பத்துக்கு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

நாகலிங்கம்: வீரபத்திர சுவாமி கோயில் வளாகத்தில் பல்வேறு அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே பெரிய 7 தலைகளுடன் கூடிய நாகலிங்கம் இங்கு உள்ளது. 

பிரம்மாண்ட நந்தி: வீரபத்திர சுவாமி கோயிலில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான நந்தி உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
அமைவிடம்: இத்திருத்தலம் ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து 130 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சத்திய சாய்பாபா அவதரித்த புட்டபர்த்தி, லேபாக்ஷியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. லேபாக்ஷிக்கு இந்துப்பூர் ரயில் நிலையத்தில் இருந்தும் செல்லலாம். பேருந்து வசதியும் உள்ளது.

பட்டுச் சேலைகளுக்கு பிரசித்தி பெற்ற தர்மாவரம் நகரம் இதன் அருகேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.