வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் 

 வர்ணிப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அழகு ரூபமாக வீற்றிருக்கிறாள் அன்னை ஸ்ரீபுவனேஸ்வரி. புதுக்கோட்டை நகரில் கீழ ஏழாம் வீதியில் அமைந்துள்ளது புவனேஸ்வரி அம்மன் ஆலயம். 

ஜி.ஏ. பிரபா

 ஸிவ - ஸக்தி: காம: க்ஷித - ரத ரவி: ஸீதகிரண:
 ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா -மார ஹரய:
 -செளந்தர்ய லஹரி
 வர்ணிப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அழகு ரூபமாக வீற்றிருக்கிறாள் அன்னை ஸ்ரீபுவனேஸ்வரி. புதுக்கோட்டை நகரில் கீழ ஏழாம் வீதியில் அமைந்துள்ளது புவனேஸ்வரி அம்மன் ஆலயம்.
 "ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம்' என்றாலும் அம்பிகை குடி கொண்டுள்ளதால் அவள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
 மூலஸ்தானத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில், அழகான தோற்றத்துடன் சகல லட்சணங்களும் அமைந்து ஞானமே வடிவாக அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப காட்சி தருகிறாள் அன்னை புவனேஸ்வரி. இங்கு ஸ்ரீசக்ர மகாமேரு உள்ளதால் சகல தோஷங்களையும் போக்கி நலம் யாவும் தரும் திருத்தலமாய் விளங்குகிறது.
 அன்னை முப்பெரும் சக்தி வடிவம். "ஹ்ரீம் பீஜம் : சாக்த பீஜம்' எனப் போற்றப்படுகிறது. அந்த பீஜத்தில் உறையும் மகாசக்தி புவனேஸ்வரி. அவளின் முழு அழகையும், அருளையும் வெளிப்படுத்தும் விதமாக இவ்வாலயம் திகழ்கிறது.
 இங்குள்ள அர்த்த மண்டபத்தில் விநாயகர், பாலமுருகன் காட்சி அளிக்கிறார்கள். ஆலயத்தின் விசேஷமாக வேங்கடேஸ்வரர், காலபைரவர், நவகிரக சந்நிதிகள் திகழ்கின்றன. சனீஸ்வரருக்கு தனிச் சந்நிதி உள்ளது. அஷ்டதசபுஜா மகாலக்ஷ்மி, துர்காதேவி, 25 தலைகள் கொண்ட சதாசிவர் சந்நிதி ஆகியவை இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
 சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஆந்திர மாநிலத்தில் இருந்த தவனேஸ்வரம் என்ற கிராமம், கோதாவரி நதிக்கு குறுக்கே அணை கட்டும்போது மூழ்கி விட்டது. அங்கிருந்த அந்தணர் குடும்பங்கள் வேறு பக்கம் இடம் பெயர்ந்தனர். அதில் ஒருவர் வேதமூர்த்தி சாஸ்திரிகள். பத்ராசல ராமனின் தீவிர பக்தர். இவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
 ஜாதகத்தைப் பார்க்கும்பொழுது, "இக்குழந்தை உலகத்திற்கு ஒளி காட்ட வந்த தெய்வக் குழந்தை' என்று புரிந்து கொண்டார் சாஸ்திரிகள். மகன் வேதம் பயில்வதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தனர்.
 அங்கு மகன் வக்கீல் தொழிலுக்குப் படித்தார். பணத்துக்கு ஆசைப்படாமல், நியாயம், தர்மம் என்றே வாதாடியதால் மகனின் இயற்பெயர் தெரியாவிட்டாலும் "ஜட்ஜ் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.
 இவரின் பெருமைகளை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா, நீதி பரிபாலனம் செய்ய இவரை அழைத்து வரச் செய்தார். அங்கு பல வழக்குகளைத் திறம்பட விசாரித்து தீர்ப்பு வழங்கிய ஜட்ஜ் சுவாமிகள், ஆத்மஞானம் தேடி ஒரு கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
 பல இடங்களில் சுற்றித் திரிந்த அவர் காளஹஸ்தி வந்து சேர்ந்து, ஒரு குருவைத் தேடி ஓர் ஆசிரமத்தின் வாசலில் நின்றார்.
 ஆசிரமத்தின் தலைவர் ராமகிருஷ்ண குரு மகராஜ், "ஞானதீபம்' ஒன்று வாசலில் நிற்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். ஜட்ஜ் சுவாமிகளை உள்ளே அழைத்து வந்து அவருக்கு "சதாசிவம்' என்று நாமம் சூட்டி, தீட்சை வழங்கினார். இதன் பிறகு அவர் "சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.
 அதன்பிறகு பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்ற சுவாமிகள், திருச்சி தாயுமானசுவாமி கோயிலுக்கு வந்தபோது, தன் அந்திம நேரம் நெருங்குவதை உணர்ந்தார். புதுக்கோட்டை நோக்கி நடந்தே சென்றார். அங்கிருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள நார்த்தாமலை சிவன் கோயிலில் நிஷ்டையில் அமர்ந்தார்.
 அவரின் நிஷ்டை கலையாமல், மக்கள் அவரை பல்லக்கில் அமர்த்தி வைத்து, புதுக்கோட்டைக்கு கொண்டு வந்தனர். அங்கு சுவாமிகள் இறைவனுடன் கலந்தார். புதுக்கோட்டை மன்னர் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு, நகரின் கிழக்குப் பகுதியில் தற்போதுள்ள இடத்தில் அடக்கம் செய்தனர்.
 அங்குதான் அம்பிகையின் உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
 பிரபஞ்சத்தின் மூலமாக விளங்குபவள் ஆதிசக்தியாம் பராசக்தி. அவளின் அம்சமாக விளங்குபவள் புவனேஸ்வரி.
 "நமது பூமியைப் போல் எண்ணற்ற உலகங்கள் உள்ளன' என்கிறது வேதம். அந்த உலகங்கள் அனைத்திற்கும் அன்னை புவனேஸ்வரியே அதிபதி. புவனம் முழுதும் காப்பவள் என்பதால் இவள் "புவனேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.
 தியானம் செய்வதற்கு ஏற்ற இடம். எத்தனை தீராத மனவேதனைகள் இருந்தாலும், இங்கு வந்து அம்பிகையை வணங்கி நின்றால் அனைத்தும் தூள், தூளாகும் என்பது சத்தியமான வார்த்தை. அம்பிகையை பச்சை வண்ண ஆடையில் வீட்டில் வைத்துப் பூஜித்தால் சொந்த வீடு தருவாள் என்பதும் நிரூபணமான உண்மை.
 இங்கு நவராத்திரி, பெளர்ணமி தினங்களும், ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு புடவை சாற்றி, அர்ச்சனை செய்கிறார்கள்.
 செளந்தர்ய லஹரி: அம்பிகையின் துதிகளில் முக்கியமானது செளந்தர்ய லஹரி. ஆதிசங்கரர் கைலாயம் சென்று அம்மையையும், அப்பனையும் தரிசித்து வரும்போது ஈஸ்வரனால் அளிக்கப்பட்டது இந்த ஸ்லோகங்கள். ஆனால் தேவலோக விஷயங்கள் வெளியில் போகக்கூடாது என்று நந்திகேஸ்வரர் சுவடிகளைப் பிடுங்கிக் கொண்டுவிட, ஆச்சார்யர் கையில் நாற்பத்தொன்று ஸ்லோகங்களே கிடைத்தன.
 அம்பிகையின் உத்தரவினாலும், அவளின் கருணையாலும் மீதி ஸ்லோகங்களை சங்கரர் எழுதி முடித்தார். பரமேஸ்வரனே அம்பிகையின் ரூப லாவண்யங்களை புகழ்ந்து பாடிய நூறு ஸ்லோகங்கள் அவை. எனவேதான் துதிகளில் எல்லாம் சிறந்ததாக செளந்தர்ய லஹரி போற்றப்படுகிறது.
 "யதீயம் செளரப்யம் சஹஜம் உபலப்தும் ஸுமநஸோ'
 என்கிறார். "அம்பிகையின் கருங்கூந்தல் நம் இருளை நீக்கும் ஒளி வெள்ளம்.
 தாயே! உன்னை வணங்கிய பின் நாங்கள் செல்வத்தை அடைவதில் விருப்பம் கொள்வதில்லை. நல்லோர்கள் அல்லாதவர்களுடன் எந்த உறவும் இல்லை. சம்சாரமென்னும் கடலில் வீழ்ந்து அல்லல்பட மாட்டோம். ஆனால் மன்மதனின் மமதையை அழித்த சிவனாரின் மனதில் வாசம் செய்யும் உன் திருவடிகளை வழிபடுவதையே எங்கள் கடமையாகக் கொள்கிறோம்!' என்று புகழ்கிறார்.
 வாழ்க்கை என்பது நகர்ந்து கொண்டே இருப்பது; சலனம். வாழ்வதற்கான போராட்டமே அதை நகர்த்திச் செல்கிறது. அதை இயல்பாக, எந்தக் கடினமும் இல்லாமல் கடக்க அம்பிகையே துணை நிற்கிறாள்.
 புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்பிகை அத்தகைய போராட்டமான வாழ்விலிருந்து நம்மைக் கரை சேர்க்கிறாள். நம்முள் குடியிருக்கும் மமதை என்னும் பிசாசை அடித்து விரட்டி, வாழ்க்கைப் போராட்டம் இல்லாமல் வாழ வைக்கிறாள்.
 (தொடரும்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT