ஏழு சிற்றாறுகளின் நடுவே...
அடர்ந்த வனப்பகுதியில் ஏழு சிற்றாறுகளின் நடுவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள், தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில், நாகசன பள்ளியில் உள்ள "ஏடுபாயல வனதுர்க்கை பவானி அம்மன்!'.
அடர்ந்த வனப்பகுதியில் ஏழு சிற்றாறுகளின் நடுவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள், தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில், நாகசன பள்ளியில் உள்ள "ஏடுபாயல வனதுர்க்கை பவானி அம்மன்!'.
தமிழகத்தில் காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், சமயபுரம் மாரியம்மன் கோயில்கள் பிரசித்தி பெற்று விளங்குவதைப் போல், தெலங்கானா மாநிலமும் புகழ் பெற்ற கோயில்களைக் கொண்டுள்ளது.
சில்கூர் பாலாஜி கோயில், பத்ராசலம் சீதா ராமச்சந்திர சுவாமி கோயில், பச்சல சோமேஸ்வரர் கோயில், சாய சோமேஸ்வரர் கோயில், தேவுன்னிகட்டா, ஆயிரம் தூண்கள் கோயில், ராமப்பா கோயில் எனப் பல்வேறு கோயில்கள் பிரசித்தி பெற்றுள்ளன.
அந்த வரிசையில் ஏடுபாயல வனதுர்க்கை பவானி அம்மன் கோயிலும் ஒன்றாகும்.
மேடக் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயிலுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அம்மனின் அருளும், சப்த ரிஷிகளின் ஆசியும், அத்துடன் வனத்தில் சாகசப் பயணம் மேற்கொண்ட அனுபவமும் கிட்டுகிறது. இத்தலம் "கருட கங்கை' எனவும் அழைக்கப்படுகிறது.
7 சிற்றாறுகள் சூழ்ந்துள்ள கோயில்: வனதுர்க்கை பவானி அம்மன் கோயில் ஏழு சிற்றாறுகளின் நடுவில் உள்ளது. "ஏடு' என்றால் தெலுங்கில் ஏழு என்று பொருள். "பாயலு' என்றால் சிற்றாறுகள் ஆகும். இந்த ஏழு சிற்றாறுகளும் ஓரிடத்தில் இணைந்து "மஞ்சீரா' நதியாகிறது.
7 முனிவர்கள் வழிபாடு: நமது புராணங்களில் இடம் பெற்ற ஏழு தலைசிறந்த முனிவர்களான ஜமத்கனி, அத்ரி, காஷ்யபர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பரத்வாஜர், கெளதமர் உள்ளிட்டோர் ஒன்றுகூடி, மஹா சிவராத்திரியன்று வனதுர்க்கை பவானி அம்மனுக்கு வழிபாடு நடத்துவார்களாம்.
ஏழு முனிவர்களும் சிற்றாறுகளாக உருமாறி கோயிலைச் சுற்றிலும் வலம் வருகிறார்கள் என்பது ஐதீகமாகும். கோயிலுக்கு முன்புறம் 3 சிற்றாறுகளும், பின்புறம் 4 சிற்றாறுகளும் பாய்கின்றன.
ஜாத்திரை திருவிழா: சிவராத்திரியையொட்டி ஒரு வாரம் நடைபெறும் வனதுர்க்கையம்மன் ஜாத்திரை திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். ஏறத்தாழ 20 லட்சம் பேர் இவ்விழாவிற்கு வந்து செல்வர்.
ஏராளமானோர் அங்கேயே 3 நாள்கள் கூடாரம் அமைத்துத் தங்குவது வழக்கம். 7 சிற்றாறுகளிலும் புனித நீராடி அம்மனை வழிபட்டு, நூற்றுக்கணக்கானோர் ஆடுகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுவர். மஹா சிவராத்திரியன்று தொடங்கும் ஜாத்திரை விழாவில் பண்டி உற்சவம் நடைபெறும். இதில் 32 கிராமங்களைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் இடம் பெறும் ரத உற்சவம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
கோதாவரியின் கிளை நதியான மஞ்சீரா ஆறு கர்நாடகத்தின் பீடர் மாவட்டத்தில் தொடங்கி, மேடக் வழியாக பாய்கிறது. முதலிரண்டு சிற்றாறுகள் வசிஷ்டர், ஜமத்கனி எனவும், அதில் இருந்து விஸ்வாமித்திரர் என்ற சிற்றாறும் கோயில் பின்புறமாகப் பாய்கின்றன. பரத்வாஜர், கெளதமர், அத்ரி, காஷ்யபர் ஆகிய சிற்றாறுகள் கோயிலின் முன்புறம் பாய்கின்றன.
மழைக்காலங்களில் ஏழு சிற்றாறுகளும் நீர் நிறைந்து அம்மனின் பாதங்களை நனைத்தவாறு செல்கின்றன. இதைக் காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அமைவிடம்: ஏடுபாயல வனதுர்க்கையம்மன் கோயில் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாதில் இருந்து 112 கி.மீ. தூரத்திலும், மேடக்கில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும் உள்ளது. 12 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் பசுமையான காடுகளைக் கொண்டதாகும்.
ஹைதராபாதில் இருந்து சாலை மார்க்கமாக (காந்தி மிசாம்மா சதுக்கம் வழியாக) 2 மணி நேரத்தில் நாகசன பள்ளிக்குச் சென்று விடலாம். மேடக் நகருக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து பேருந்துகள், கார்கள் மூலமும் செல்லலாம்.
நேரம்: வார நாள்களில் அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு: 09866331529.