-செளந்தர்ய லஹரி
கணவனில் பாதி மனைவி என்று உணர்த்த, ஈசனின் பாதியாக தேவி வரம் வாங்கிய திருத்தலமே "திருவண்ணாமலை'.
இங்கு இறைவனுடன் சரிபாதியாக அம்பிகை, உண்ணாமுலை அம்மன் என்றும் அபிதகுஜாம்பாள் என்ற பெயரிலும் காட்சியளிக்கிறார். ஈசனும், ஈஸ்வரியும் வேறல்ல என்று இறைவன் இங்கு உணர்த்துகிறார்.
இதுவே தேவி உபநிஷத்தில் ஒரு கதையாக கூறப்படுகிறது.
ஒருமுறை தேவர்கள் தங்கள் வீரப் பிரதாபங்களில் கர்வம் அடைந்து பெருமை பேசும்போது, அவர்கள் முன் ஒரு மிகப் பெரிய ஒளிப் பிழம்பு தோன்றுகிறது.
"அது யார்? என்ன?' என்று அறிய தேவர்கள் முயற்சி செய்தும் அறிய முடியவில்லை. அதனிடம் தோற்றுப் போகிறார்கள். ""யார் நீ?'' என்று கேட்கிறார்கள்.
அதற்குத் தேவி ""நான் பரப்பிரம்ம வடிவம். என்னிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. இவ்வுலகே நான். பஞ்சபூதங்களில் ஜீவனாக நானே இருக்கிறேன்!'' என்று கூற, தேவர்கள் அவளை "நமோ தேவ்யை மஹாதேவ்யை சிவாயை ஸததம் நம்:' என்று போற்றித் துதிக்கிறார்கள்.
அனைத்தும் தேவி அம்சம் என்று உணர்ந்தவர்கள் பேதம் பார்ப்பதில்லை.
ஆனால் பிருங்கி முனிவர் ஒரு முறை கைலாயத்தில் பார்வதியுடன் ஈசன் அமர்ந்திருந்தபோது அவரை தரிசிக்க வந்தார். வண்டு உருவம் எடுத்து ஈசனை மட்டுமே சுற்றி வலம் வந்தார். தேவியை வணங்கவில்லை.
இதில் மனம் வருந்திய தேவி பிருங்கி முனிவருக்கு சாபமிட்டார். உடலில் உள்ள ரத்தம், சதை, சக்தி இற்றுப் போய் எலும்பும் தோலுமாக அலைய வேண்டும் என்று சாபம் அளிக்கிறார்.
தன் பக்தனின் நிலை கண்டு வருந்திய ஈசன் மூன்றாவது காலாக ஒரு ஊன்றுகோலை பிருங்கி முனிவருக்கு அளிக்கிறார். இதில் மகிழ்ந்த முனிவர், ஈசன் முன்பு ஆனந்த நடனமாடுகிறார்.
தன்னை மதிக்காத முனிவருக்கு ஈசன் கருணை காட்டியதில் அம்பிகை மனம் வருந்துகிறார். எனவே ஈசனின் உடலில் பாதியை, தான் அடைய வேண்டுமென்று கடுமையான தவம் செய்கிறார்.
அவர் தவத்தில் மகிழ்ந்து ஈசன் தன் உடலில் பாதியை அம்பிகைக்கு அளிக்கிறார். இப்பொழுது பிருங்கி முனிவர் இருவரையும் சேர்ந்து வணங்கியாக வேண்டிய கட்டாயம். "சக்தியின்றி சிவமில்லை; சிவம் இன்றி சக்தி இல்லை' என்று உணர்த்திய தலம் திருவண்ணாமலை!
ஒரு கணவன் தன் மனைவியின் கெளரவத்திற்கும் மரியாதைக்கும் உரியவர் ஆகிறார். தன் உடலில் அவள் பாதி என்று உணர்ந்து அவளைத் தானும் மதித்து உலகில் உள்ளவர்களும் பெரும் மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய இடம் திருவண்ணாமலை. இங்கு அன்னை அபித குஜாம்பாள் என்ற பெயருடன் அழகுற காட்சியளிக்கிறாள்.
ஈடு சொல்ல முடியாத அழகுடன் தன் பக்தர்களைக் காக்க புன்னகையுடன் காட்சி அளிக்கிறாள் அம்பிகை. இவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஈசனின் இடப்பாகத்தில் இடம் பிடித்த மகிழ்ச்சியுடன் அழகுற காட்சி தரும் அன்னையைத் தரிசித்தால் அனைத்து வினைகளும் அகலும்.
அடிமுடி காண இயலா அண்ணாமலையாக இங்கு காட்சி அளிக்கிறார் இறைவன். பஞ்சபூதத் தலங்களில் இது அக்னி தலம். தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்று. ஆறு பிராகாரங்களும், ஒன்பது கோபுரங்கள், பல சந்நிதிகள் கொண்டது இக்கோயில்.
இறைவன் இத்தலத்தில் சுயம்பு லிங்கத் திருமேனியுடன், நாகக் கிரீடம் அணிந்து வெண்ணிற ஆடையுடன், தனி அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது. அழகு பொழியும் அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறாள் அம்பிகை.
லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பிகையின் அழகைக் கூறும்போது "நிஸ்துலா, நீல சிகுரா' என்றும் "அவளுக்கு நிகர் யாருமில்லை' என்கிறது. அவளின் குளிர்ச்சியான, கனிவான பார்வை நம்மீது விழுந்தால் போதும் சகலவிதமான புருஷார்த்தங்களை அடைய முடியும்.
அவளைப் பணிவதன் மூலம் ஆனந்த வாழ்வு அளிப்பாள் அபிதகுஜாம்பாள்.
கார்த்திகை மாத பிரம்மோற்சவம், தீபத் திருநாள், மாசி மகா சிவராத்திரி இவற்றுடன், ஆடிப்பூரம் அன்று தீமிதி திருவிழா அம்மன் சந்நிதி முன் நடப்பது மிகச் சிறப்பானது. இங்கு லிங்கமே மலையாக அமைந்துள்ளது. இறைவனின் இடப்பாகம் பெற அம்பிகை கிரிவலம் வந்து தவம் செய்ததால், இங்கு பெளர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகச் சிறப்பு. அம்பிகையின் ஐம்பத்தோர் சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடமாகும்.
அருணகிரிநாதர் வாழ்க்கையில் வெறுப்புற்று கிளி கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது ஆறுமுகன் அரவணைத்துக் காப்பாற்றித் திருப்புகழ் எழுதப் பணித்தத் தலம். திருவெம்பாவை பிறந்த இடம்.
சேர, சோழ, பாண்டிய, ஹொய்சாள மன்னர்களால் பலமுறை திருப்பணிகள் செய்யப் பட்ட மிகப் பழைமையான கோயில். ஏராளமான சித்தர்களும், முனிவர்களும், மகரிஷிகளும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை.
மனத் துயரங்கள் நீக்கும் தலம் இது. அம்பிகையை வணங்கினால் குழந்தைப்பேறு, மாங்கல்ய பாக்கியம், ஆயுள், ஆரோக்கியம் என்று அனைத்தும் தருவாள்.
பிரம்மதீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் உள்ளது. மகிழமரமே தல விருட்சமாகத் திகழ்கிறது. அழகுக்கெல்லாம் அழகாக அம்பிகை திகழ்கிறாள்.
"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ...'
என்று புகழ்கிறது திருஞானசம்பந்தரின் தேவாரம்.
"விரிவான பூமிதனில் வாழும் மாந்தர் வெகு தப்பிதங்கள் செய்யினும்
அரிதானஞான மதுகொண்ட பேரை யணுகிப் புரந் தாளுவாய்
பெருவாழ்வளித்து பிரியத்தோ டென்னைப் பிரியாதிருக்க விப்போ
வருசெல்வி உண்ணாமுலை நாமதேவி வரவேணுமென்றனருகே'
என்கிறது உண்ணாமுலையம்மன் பதிகம்.
காந்த சக்தி நிறைந்த மலை என்பதால் கிரிவலம் வரும்போது அங்குள்ள மூலிகைகளுடன் காந்தச் சக்தியும் கலந்து நம் உடலில் படுவதால் பல வியாதிகள் குணமாகின்றன.
இறைவன் முன்பு கார்த்திகை தீபத்தன்று அகண்ட தீபம் ஏற்றி, பின்பு மலையில் மகர தீபம் ஏற்றப் படும். அப்போது மட்டும் இறைவன் தேவியுடன் இணைந்து அர்த்தனாரீஸ்வரராகக் காட்சி அளிப்பார். தீப ஒளியில் அன்னை மூன்று தேவியரின் வடிவாகக் காட்சி அளிப்பார். அம்பிகைக்கு இடப்பக்கம் அளிக்க, ஈசன் ஜோதி வடிவாகத் தோன்றி, "இடது பக்கமாக வலம் வா!' என்று அசரீரியாகக் கூறி அன்னையை ஏற்றுக்கொண்டார் என்பதால் இங்கு அம்பிகைக்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பு.
தீபஜோதி வடிவாக அம்பிகையை வழிபடுவதால் அன்னை மகிழ்ந்து நமக்கு ஆனந்த வாழ்வு அளிப்பாள்..!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.