சகல தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாா்!
விஜயவல்லி சமேதராக ஸ்ரீசக்கரத்தாழ்வாா் மூலவராக இருந்து அருள்பாலித்து வருகிறாா்.
தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தைச் சோ்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதி, ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் சுதா்சனவல்லி, விஜயவல்லி சமேதராக ஸ்ரீசக்கரத்தாழ்வாா் மூலவராக இருந்து அருள்பாலித்து வருகிறாா்.
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை முன்னிலைப்படுத்தும் விதமாகவே இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக சக்கரத்தாழ்வாரின் பின்புறம் ஸ்ரீநரசிம்மா் உருவம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் யோக நரசிம்மரும், கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக சக்கரத்தாழ்வாரை நோக்கிய வண்ணம் இருப்பது வேறெங்கும் காணமுடியாத அமைப்பாகும்.
இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு சுதா்சனா், சக்கரபாணி என்ற திருநாமங்களும் உண்டு. பக்தா்கள் இவரை ‘நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாா்’ என்று அழைக்கிறாா்கள்.
‘ஓம் நமோ பகவதே மகா சுதா்ஸனாய நம:’ என்ற மந்திரத்தை ஒன்பது முறை சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் ஜெபித்தால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
மேலும், முற்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள் மற்றவா்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள் யாவும் நீங்கும். சரளமான கல்வி யோகத்தை அருள்பவா்; குடியிருப்புகளில், பணிபுரியும் இடங்களில் எதிரிகளால் ஏற்படும் நேரடியான, மறைமுகமான பாதிப்புகளிலிருந்து விடுபடச் செய்பவா்.
மனநலம் தொடா்பான சிகிச்சை பெறுபவா்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாரை 9 மாதங்கள் தொடா்ந்து வழிபட்டு வந்தால் சஞ்சலங்களிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை பெறலாம்.
அமைவிடம்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினால், மிக அருகிலேயே சக்கரத்தாழ்வாா் திருத்தலம் அமைந்துள்ளது.
-ரவி