திருப்பத்தூர் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் நாடி வந்து வழிபடும் பக்தர்களுக்கு நல்வழி கிட்டுகிறது. வேண்டியவற்றை அருளும் தலமாக விளங்குகிறது.
திருப்பத்தூரின் கிழக்கே கோட்டைப் பகுதியில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது கோயில் கல்வெட்டுகளில் அறியப்படுகிறது. ராஜராஜ சோழன் உள்பட சோழ மன்னர்கள் இங்கு வழிபட்டு, திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கருணைகளைப் பொழியும் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உபய நாச்சியார்களுடன் வரம் தரும் மணிவண்ணனாகவும், வினைகளைத் தீர்க்கும் திருவேங்கடவனாகவும் எழுந்தருளியுள்ளார். தன்னை நாடி வரும் தன்னடியாருக்கு குறைகளைத் தீர்த்து கண்களால் கருணை மழையைப் பொழிந்து வருகிறார் ஸ்ரீ கஜேந்திர வரதராஜன்.
உற்சவர் ஸ்ரீ மனத்துக்கினியான் எனும் பெயர் கொண்டவர். மூலஸ்தானத்தில் த்ருவ, கெளதுக, உத்ஸவ, பலிபேரங்கள் எழுந்தருளியுள்ளன. நவநீத கண்ணன், சக்கரத்தாழ்வார் உள்ளிட்டோர் எழுந்தருளி வரமளிக்கின்றனர்.
மார்க்கண்டேய முனிவர்களுக்கு பெருமாள் இங்கேயே காட்சி அளித்ததாக ஐதீகம். இதனால், அவர்கள் இருவரும் பெருமாளை வணங்கியவாறு கருவறையில் அமர்ந்துள்ளனர்.
உள் மண்டபத்தின் வடபுறத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளி உள்ளனர். வெளிமண்டபத்தின் வடபுறம் தெற்கு நோக்கி ஸ்ரீ ராமானுஜருக்கு தனி சந்நிதி உள்ளது.
ஸ்ரீ பெருந்தேவி தாயார் மூலவர், உற்சவருடன் எழுந்தருளியுள்ளார். தாயார் சந்நிதிக்கு வெளியே அழகிய இருபத்து நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது.
யானைக்கு அருள் ஈந்த கஜேந்திர மோட்ச சிற்பம் சிறப்பான ஒன்று. மதில் சுவருக்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே ஒரு விளக்கும் 25 அடி உயர கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது.
இக் கோயிலானது இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமியின் அபிமான கோயிலாக, இந்தக் கோட்டை வரதராஜப் பெருமாள் கோயில் திகழ்கிறது.
இக் கோயில் சிறந்த பிரார்த்தனை தலமாகவும் இருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூட, குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு புத்திரப் பாக்கியம் கிடைக்க, தொழில் வளர்ச்சி மேம்பட, வேலைவாய்ப்பு கிடைத்திட, சொந்த வீடு அமைய... என்று வேண்டுதல்கள் அருளும் தலமாகவும் இருக்கிறது .
சனிக்கிழமைகளில் கோயிலில் எப்போதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மார்கழி, புரட்டாசி மாதங்களில் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் வரதராஜப் பெருமாள்.
இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை "திருமலையில் ஒருநாள் உற்சவம்', திருப்பாவாடை உற்சவ நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மூலவர் முன்பு பிரசாதத்தை புவியில் படாது வஸ்திரத்தில் மலைபோல் குவித்து வைத்தோ அல்லது பரவலாகச் சேர்த்து வைத்தோ
பகவானுக்கு அமுது செய்விப்பது வழக்கம். இதையே "திருப்பாவாடை உற்சவம்' என்பர். திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சி இங்கேயும் நடைபெறுகிறது.
"மலை போல் குவிந்து கிடக்கும் பிரசாதத்தை பக்தர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாலும், ஒரு வாரத்துக்குப் பின்னரே காலியாகிறது' என்கின்றனர் பக்தர்கள்.
நீண்ட நாள்களாக நிறைவேறாத ஆசைகள் எளிதில் நிறைவேற இந்தப் பூஜையில் பங்கேற்கலாம்.
-து.ரமேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.