முகப்பு
வெள்ளிமணி

தட்டாமல் பலன் தரும் காட்டழகிய சிங்கர்

Updated On : 5 ஜூலை, 2024 at 11:19 AM
பகிர்:

"கணத்தில் தோன்றி கணத்தில் அற்புதம் நிகழ்த்தும் நரசிம்மருக்கு நாளை என்பதே கிடையாது' என்பர்.

காவிரி ஆற்றின் ஓடத் துறையில் ஆற்றழகிய சிங்கர், ஸ்ரீரங்கன் வளாகத்தில் தாயார் சந்நிதி எதிரில் உயர்ந்த சந்நிதியில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் என்ற புராதனமான மூன்று சிங்கத் தலங்கள் உண்டு.

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழஅடையவளஞ்சான் வழியாக நேர் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால், காட்டழகிய சிங்கர் கோயிலை அடையலாம். முகப்பில் வரவேற்பு வளைவு உள்ளது. மேற்கு நோக்கி அமைந்த இந்தக் கோயில் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இரு ஆறுகளுக்கு இடையில் இருப்பதால் பலமுறை சேதமுற்று, மீண்டும் மீண்டும் கட்ட வேண்டிய அவசியத்தில் பிரித்து கட்டப்பட்ட கோயிலாகும்.

ஸ்ரீரங்கம் வரும் வழியில் வனவிலங்குகள் உலாவும் இடமாகத் திகழ்ந்தது. யானைகளின் தொல்லையிலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க, வல்லப

தேவன் என்ற மன்னன் லட்சுமி நரசிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்ததாக வரலாறு.

சித்திரை வீதியை நிர்மாணித்த வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாகிய கலியுகராமன் மீண்டும் திருப்பணி செய்து எடுத்துக் கட்டினான். அவனே இத்திருக்கோயிலை சுற்றி கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் என்னும் வேதம் ஓதும் அந்தணர்கள் கொண்ட குடியிருப்பை தோற்றுவித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

வனத்தைத் திருத்தி நரசிம்மர் கோயில் நிறுவப்பட்டதால் காட்டுக்கே அழகியவனான காட்டழகியசிங்கர் என்ற பெயர் ஏற்பட்டது.

நீண்ட நெடிய ஆஜானுபாகுவான உருவத்துடன் சுமார் எட்டரை அடி உயரத்தில் காட்சியளிக்கும் காட்டழகிய சிங்கர் இடது தொடையின் மீது திருமகளை இருத்திக் கொண்டு இடது கீழ்க்கையால் ஆலிங்கனம் செய்தும் வலதுகீழ்க்கரத்தால் அபய முத்திரை காட்டியும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரமேந்தியும் மேற்கு திசை பார்த்து அருளுகிறார். தெளிவான முகம் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

ஒருமுறை திருவரங்கத்தமுதனாரும், அவருடைய சீடர்களும் காட்டழகியசிங்கர் சந்நிதியில் அமர்ந்து ராமானுச நூற்றந்தாதி சேவித்தனர். 106}ஆவது பாசுரம் துவங்கும்போது ராமானுஜர் அழகியசிங்கர் அனுக்கிரகம் பெறவந்தார். அனைவரும் எழுந்து நின்றனர். உடையவர் வந்த பிறகு அவர் இருக்குமிடம் வைகுந்தம் என்பது பொருள்பட ஒரு பாடலும் 107, 108 ஆகிய பாசுரங்களை எழுந்து நின்றவாறே பாசுரம் சேவித்தனர். எழுந்து நின்று அதற்குப்பின்னால் சேவித்த இம்மூன்று பாசுரங்களும் சாற்றுமுறை பாசுரங்களாக இத்திருக்கோயிலில் கொள்ளப்படுகின்றன.

உடையவரைப் பின்பற்றி வந்த பிள்ளை லோகாச்சாரியார் ஸ்ரீவசன பூஷணம் முதலிய பதினெட்டு கிரந்தங்களையும் அதன் ரகசியங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இக்கோயிலாகும்.

காஞ்சியில் இருந்த வைணவ அடியார் ஒருவர் மணப்பாக்கத்து நம்பி. அவருக்கு பெருமாள் சில உபதேசங்களைச் செய்தார். ஒருநாள் உபதேசத்தை நிறுத்திவிட்டு, நம்பியை ஸ்ரீரங்கம் செல்லுங்கள். மீதியை அங்கு வந்து உபதேசிப்பதாகத் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் வந்த நம்பி காட்டழகிய சிங்கர் சந்நிதியில் தங்கியிருந்தார்.

ஒருநாள் அங்கு ஆசாரியரும் அவருடைய சீடர்களும் வந்தனர். ஆசாரியர் உபதேசம் செய்ய சீடர்கள் எழுந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தனர். மறைந்திருந்த மணப்பாக்கத்து நம்பி அவற்றை தேப்பெருமாள் காஞ்சியிலிருந்து நிறுத்தியதன் தொடர்ச்சியாகவே இந்த உபதேசங்கள் இருக்கின்றன என்று ஆச்சரியப்பட்டு வெளிவந்து ஆச்சாரியாரை வணங்கினார். இவ்வாறு காஞ்சி வரதராஜப்பெருமாள் உபதேசம் செய்த தலமாகும்.

60 அடி உயரமுடைய விமானம், கர்ப்பக் கிரகம், முன்மண்டபம், மகாமண்டபம், கருடன் சந்நிதி உடையது இந்தக் கோயில்.

பக்தர்கள் வேண்டுதல்படி பிரார்த்தனைத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் இழந்த பதவியை அடைதல், கல்வி அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் பிற விரும்பிய வரங்களை வேண்டிப் பெறுகின்றனர். பிரதோஷ நாளில் வழிபடும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் .

விவரங்களுக்கு 04312432246; 8428424641

-இரா. இரகுநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.