திருமருவும் சோழவள நாட்டில், நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர்ந்து குளிர்ந்த நீரோடைகள் சூழ்ந்த கிராமம்தான் பின்னத்தூர். இங்குள்ள ஸ்ரீ புஷ்பாலேஸ்வரி அம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இந்தக் கோயில் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்தக் கோயில் சோழப் பேரரசர்களின் கட்டடக் கலைநுணுக்கத்துடன் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய வாயில் கொண்டது. நுழைவு வாயிலின் உள்ளே செல்லும்போது சர்வசித்தி விநாயகர் அருளுகிறார். அதற்கடுத்து பலிபீடமும் நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. தொடர்ந்து உள்ளே செல்கையில் மகாமண்டபமும், அர்த்த மண்டபம், அந்தராளம் கருவறை என்ற அமைப்பில் உருவாகியுள்ளன. மகா மண்டபத்தில் சிறிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.
கருவறையில் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அளிக்கும் தான்தோன்றீஸ்வரமூர்த்தியாக (சுயம்புமூர்த்தி) மூலவர் கைலாசநாதர் வீற்றிருந்து அருள்புரிகிறார். மூலவருக்கு இடப்புறத்தில் தென்திசையை நோக்கி அபயவரதம் அங்குச பாசத்துடன் நான்கு கரங்களோடு அம்பிகை ஸ்ரீ புஷ்பாலேஸ்வரி என்ற திருநாமத்தைத் தாங்கி நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார்.
கோயிலின் உள்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும், விநாயகர் சந்நிதியும், வள்ளி தேவசேனா சகித சிவசுப்ரமண்யர் சந்நிதியும் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் துர்க்கையும் அதற்கெதிரே சண்டிகேஸ்வரரும், நாகர், கால பைரவர், சூரியன், சனீஸ்வரர்
சந்நிதிகளும் உள்ளன. இவர்களைத் தரிசித்து வெளியே வருகையில் வீர ஆஞ்சநேயரை வணங்கி வெளிவர நந்தவனம் உள்ளது. கோயிலின் வடபகுதியில் குதம்பை மகரிஷியால் உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.
முன்பு குதம்பை சித்தர் பல சிவ தலங்களை தரிசித்து வருகையில், பின்னத்தூரில் சிவன் கோயில் இல்லாததைக் கண்டு மனம் வருந்தினார். அதனை உணர்ந்து சிவன் வான்வெளியில் திருக்கயிலாயத்தில் பார்வதி தேவியுடன் அமர்ந்திருக்கும் திருக்காட்சியை சித்தருக்கு அருளினார். அவரும் இந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக வேண்டவே, அங்கேயே லிங்கமாக மாறி அமர்ந்தார் சிவன்.
உடனே குதம்பை சித்தர் ஒரு புஷ்பத்தை வைத்து அதில் பார்வதி தேவியை ஆவாஹணம் செய்து பூஜிக்க, அம்பிகைக்கு "புஷ்பாலேஸ்வரி' என்ற திருநாமம் உண்டாயிற்று. பின்னர் ஊர் மக்கள் விநாயகர், முருகன் முதலான தெய்வங்களை பிரதிஷ்டை செய்து ஆலயம் நிர்மாணித்தனர்.
இங்கு வழிபடுவோருக்கு சகல தோஷங்களையும் அறவே போக்கி செல்வச் செழிப்பையும், முக்தி உள்ளிட்ட அனைத்துப் பேற்றினையும் தந்து அருள்கிறார் சிவன்.
ஜூன் 2 } ஆம் தேதி கும்பாபிஷேகம் முடிந்து, தற்போது மண்டலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பின்னத்தூர்: திருத்துறைப்பூண்டி } முத்துப்பேட்டை சாலையில் உள்ளது.
விவரங்களுக்கு : 97909 15399, 94441 31600.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.