தமிழ் ஆண்டின் இறுதியான பங்குனி மாதத்தை "பங்குனிப் பருவம்' என்றும், வசந்த விழாக்களை "பங்குனி விழா' என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் பல்வேறு சிறப்புகளை உடையது.
"முருகன்- தெய்வானை திருமணம், சொக்கநாதர்} மீனாட்சி திருமணம், இந்திரன்} இந்திராணி திருமணம் , அகத்தியர்} லோபமுத்திரை திருமணம், ஸ்ரீரங்கமன்னார்} ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீராமர் } சீதை, லட்சுமணன்} ஊர்மிளா, பரதன்}மாண்டவி, சத்ருக்னன்} ஸ்ருதகீர்த்தி ஆகியோரது திருமணங்கள், திருமழப்பாடியில் நந்தி திருக்கல்யாணம், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் சிவன்} பார்வதி தேவியுடன் மணக்கோலத்தில் திருக்காட்சியருளுதல், சிவனின் தவத்தைக் கலைத்ததால் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனும் ரதிதேவியின் வேண்டுதலால் மீண்டும் உயிர் பெற்றது, சரஸ்வதி} பிரம்மதேவரின் வாக்கினில் அமர்ந்தது, வள்ளி அவதரித்த நாள், மகாலட்சுமி விஷ்ணுவின் திருமார்பில் உறையும் பாக்கியம் பெற்றது, காரைக்கால் அம்மையார் முக்தியடைந்தது, திங்களூர் சிவாலயத்தில் லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் வழிபடும் நாள் என பங்குனி உத்திர நாளின் சிறப்புகள் தொடர்கின்றன.
இந்த நாளில் திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி வருவார். நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோயிலில் பங்குனி உத்திர உற்சவமும் சிறப்பாக நடைபெறும். தீர்த்தவாரியின்போது, அந்தத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். காஞ்சி வரதராஜர் கோயிலில் ஸ்ரீபெருந்தேவித்தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள், பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சிதருவார். காமாட்சி } ஏகாம்பரேஸ்வரர் திருமணவிழா நடைபெறும்போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
தேரோட்டம், பிரம்மோற்சவங்கள், அக்கினிச் சட்டி ஏந்தும் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும். பங்குனி மாதத்தில் திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
இந்த நாளில் விரதத்தைக் கடைப்பிடிப்பதால் வெற்றிக்கான தடைகள் நீங்கும். செழிப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். உறவுகளில் உள்ள பிரச்னைகள் தீரும். இந்த விரதத்தை 48 ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடித்தால் முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மார்ச் 24}ஆம் தேதி பங்குனி உத்திர நாள் ஆகும்.
-ரஞ்சனா பாலசுப்ரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.