உலகம்

அமெரிக்கா: அலபாமா மாகாணத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வி

DIN

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி. தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இது, அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அலாமா மாகாணத்துக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜெஃப் செஷன்ஸ், டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் அமெரிக்க அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ஜெஃப் செஷன்ஸ் ராஜிநாமா செய்தார். இதனாலா காலியான இடத்துக்கு செவ்வாய்க்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரேவை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டக் ஜோன்ஸ் தோற்கடித்தார். அவருக்கு 49.9 சதவீத வாக்குகளும், ராய் மூரேவுக்கு 48.4 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் புகார்களுக்குள்ளான நிலையிலும், ராய் மூரே தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவளித்த அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, இந்தத் தோல்வி ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறது. டிரம்ப்பின் தீவிர கொள்கைகளால் ஏற்கனவே சலசலப்பு ஏற்பட்டுள்ள குடியரசுக் கட்சியில், இந்தத் தோல்வி மேலும் பிளவை அதிகரிக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.
அந்தக் கட்சியின் எஃகுக் கோட்டையாகக் கருதப்படும் அலபாமா மாகாணத்தில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, நாடாளுமன்ற மேலவையில் குடியரசுக் கட்சிக்கும் (51), ஜனநாயகக் கட்சிக்கும் (49) இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தல் முடிவு, அதிபர் டிரம்ப்பின் தேசிய அளவிலான கொள்கைகளால் ஏற்பட்ட விளைவு என்று கணிசமான குடியரசுக் கட்சியினர் கருதுவதாகக் கூறப்படுகிறது. 
அலபாமா மாகாணம் சார்பில் மிக நீண்ட காலமாக எம்.பி.யாக இருந்த ரிச்சர்ட் ஷெல்பி உள்ளிட்ட கட்சியின் ஏராளமான உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் ராய் மூரேவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT