உலகம்

தென் கொரியா: செயல்பாட்டுக்கு வந்தது வான் பாதுகாப்பு ஏவுகணை

DIN

தென் கொரியாவில் ஈடுபடுத்தியுள்ள வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடம் முழு செயல்பாட்டுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்தது.
வட கொரியாவின் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தென் கொரியாவில் வான் பாதுகாப்புக்கான அதிநவீன ஏவுகணை தளவாடத்தை அமெரிக்கா அமைத்துள்ளது. எதிரியின் ஏவுகணைகளை விண்ணில் தடுத்து அழிக்கும் அந்த தளவாடம் அண்மையில் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
தென் கொரியாவின் சியோங்ஜு பகுதியில் அமெரிக்கா அமைத்துள்ள வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடம் செயல்பாட்டுக்கு வந்தது. எதிரியின் சிறு ரக மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகளை நடுவானில் தடுக்கும் திறன் இந்த வான் பாதுகாப்பு தளவாடத்துக்கு உள்ளது.
இந்த தளவாடத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் நடுவானில் தடுத்து அழிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் திறனை அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரிய பிரிவினை காலம் முதலே தென் கொரியா மீது கடும் பகை கொண்டுள்ள வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்கா ராணுவ நிலையை அமைத்துள்ளது.
வட கொரிய அச்சுறுத்தல் காரணமாக, நீண்ட காலமாகவே, தென் கொரியாவில் அமெரிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது 28,000 அமெரிக்க வீரர்கள் தென் கொரியாவில் உள்ளனர்.
தென் கொரியாவைப் பாதுகாப்பது அமெரிக்காவின் தலையாய பொறுப்பு என்றும் வட கொரியாவைக் கட்டுப்படுத்த அனைத்து வழிமுறைகளும் மேற்கொள்வோம் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இந்த நிலையில் வான் பாதுகாப்புக்கான அதிநவீன ஏவுகணை தளவாடத்தை தென் கொரியாவில் அமெரிக்கா ஈடுபடுத்தியது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு செயல்படும் அந்த ஏவுகணை தளவாடம் எப்போது வேண்டுமானாலும் செலுத்தப்படக் கூடிய தயார் நிலையில் இருக்கும்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தடைகளையும் மீறி வட கொரியா இது வரை ஐந்து அணு ஆயுத சோதனை நிகழ்த்தியிருக்கிறது. ஆறாவது சோதனையை நிகழ்த்தப் போவதாக மிரட்டியும் வருகிறது. மேலும் ஏராளமான ஏவுகணை சோதனைகளையும் அந்நாடு நிகழ்த்தியுள்ளது. அணு ஆயுதத்தை ஏந்தி கண்டம் விட்டு கண்டம் பறந்து தாக்கும் நெடும்பயணத் திறன் கொண்ட ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாகக் கூறி வருகிறது.
இதனிடையே, அமெரிக்க கடற்படைக் கப்பல் 'கார்ல் வின்ஸன்' கொரிய தீபகற்பப் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT