உலகம்

ஊழல் வழக்கு விசாரணைக்குத் தடை கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் மனு

DIN

தனக்கு எதிரான ஊழல் புகார் குறித்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பது: 
தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என் மீதும், எனது மகன்கள், மகள், மருமகன் மீதும் மூன்று தனித் தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. நிதி அமைச்சராக இருந்த இஷாக் தார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
என் மீதான குற்றச்சாட்டாக குறிப்பிட்டிருப்பது சொத்துக் குவிப்பு தொடர்பானது. இந்த ஒரே குற்றச்சாட்டுக்காக மூன்று வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. மேலும், எனது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். இந்த நடவடிக்கை ஒரே குற்றச்சாட்டுக்குப் பல தண்டனைகளைக் கோரும் விதமாக உள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, மூன்று வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் முறைப்படி நீதிமன்றத்தில் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும். அதுவரையில், தற்போது இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதாக நவாஸ் ஷெரீஃபின் வழக்குரைஞர் முகமது காசிம் மீர்ஜாட் கூறினார். உச்ச நீதிமன்றம் அதனை எப்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்பது தெரியவில்லை. 
நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோர் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுப் பதிவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தில் ஏற்பட்ட அமளியால், குற்றச்சாட்டுப் பதிவு நடவடிக்கையை வரும் அக். 19}ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். அதே நாளில் விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பனாமா ஆவணக் கசிவைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது எழுந்த சொத்துக் குவிப்பு புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் அவரைத் தகுதி நீக்கம் செய்தது. மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மூன்று தனித் தனி வழக்குகளைப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT