உலகம்

இலங்கை பிரதமர் பொறுப்பை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்ச

DIN


இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச இன்று தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை, அதிபர் சிறீசேனாவிடம் மகிந்த ராஜபக்ச வழங்கினார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச இலங்கையின் பிரதமராகச் செயல்பட அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் ராஜபட்சவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ராஜபட்ச பிரதமராகச் செயல்படவும், அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் தங்களது துறைகளில் தொடர்ந்து பணியாற்றவும் இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச மேல்முறையீடு செய்தார். இதனை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், "இந்த மனுவின் மீதான விசாரணை முடியும்வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்க முடியாது' என்று தெரிவித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே ராஜபட்சவின் மகன் நமல் சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "இலங்கையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். அவர் சனிக்கிழமை (டிச.15) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிறகு பதவி விலகுவார். சிறீசேனாவின் சுதந்திரா கட்சியுடன் இணைந்து, பெரும் அரசியல் கூட்டணியை உருவாக்க அவர் தொடர்ந்து பணியாற்றுவார்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிபர் சிறீசேனாவிடம் மகிந்த ராஜபட்ச தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT