உலகம்

கிரைமீயா கல்லூரியில் வெடிகுண்டுத் தாக்குதல்: 18 பேர் பலி

DIN


ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிரைமீயா பகுதி கல்லூரியில் புதன்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்தாலும், அந்தத் தகவலை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இதுகுறித்து ரஷியாவின் பயங்கரவாதத் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிரைமீயாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கெர்ச் நகரில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் மர்மமான முறையில் வெடிகுண்டு ஒன்று புதன்கிழமை வெடித்துச் சிதறியது.
இதில் 18 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள் ஆவர்.
இந்தத் தாக்குதலில் 50 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து கண்டறிய, தடயவியல் நிபுணர்கள் சம்பவப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர் என்று அந்த ஆணையம் தெரிவித்தது.
பயங்கரவாதத் தாக்குதல்?: 
கிரைமீயா கல்லூரியில் நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்குமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுகுறித்து விரிவான விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூடு?: இதற்கிடையே, தாக்குதல் நடைபெற்ற கல்லூரியின் இயக்குநர் ஒல்கா கிரெபெனிகோவா கூறுகையில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கல்லூரிக்குள் நுழைந்து சரமாரியாகச் சுட்டதாகவும், அதில் மாணவர்களும், ஆசிரியர்களும் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனைக் கண்டு தாம் ஓடி ஒளிந்ததாகவும் உள்ளூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், இந்தத் தகவல்களை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இந்தத் தாக்குதலில் 18 வயது மாணவர் ஈடுபட்டதாகவும், அந்தத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்த மாணவர்களையும், கல்லூரி ஊழியர்களையும் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியிலுள்ள பிற பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT