இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்திருந்தாலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடனான (இஸ்ரோ) ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு நாசா நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் பிரைடன்ஸ்டைன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான நாசா-இஸ்ரோ ஒத்துழைப்பு திட்டத்தை ரத்து செய்வதாக அண்மையில் தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம்.
எனினும், இஸ்ரோவுடனான கூட்டுறவின் அங்கமாக, கோள் அறிவியல் ஆய்வு ஒத்துழைப்பு திட்டம், அமெரிக்க - இந்திய புவி அறிவியல் ஒத்துழைப்பு திட்டம், சூரிய ஆய்வு ஒத்துழைப்பு திட்டம் ஆகியவற்றுடன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான நாசா-இஸ்ரோ கூட்டு ஒத்துழைப்பு திட்டமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்.
அமெரிக்க அதிபர் மாளிகையின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா நடத்திய செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை குறித்து தனது அதிருப்தியை நாசா நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் பிரைன்ஸ்டைன் வெளிப்படுத்தியிருந்தார்.
இதுகுறித்து அவர் இந்த மாதம் 1-ஆம் தேதி கூறுகையில், "இந்தியா மேற்கொண்ட அந்த ஏவுகணை சோதனையின் விளைவாக சுமார் 400 செயற்கைக்கோள் சிதறல்கள் விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதனால், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவின் அந்த சோதனை மிகவும் அபாயகரமானது ஆகும்' என்று கூறியிருந்தார்.
இந்தச் சூழலில், தற்போது அவர் இஸ்ரோ தலைவருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 300 கி.மீ. உயரத்தில் செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை மூலம் இந்தியா வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி அறிவித்தார்.
இதன் மூலம், செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட நாடுகளின் பெருமைக்குரிய பட்டியலில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுடன் இந்தியாவும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.