உலகம்

இந்தியா்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்கள்: முதல்கட்ட பட்டியல் ஒப்படைப்பு

DIN

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது.

இதில், ஆட்டோமொபைல், ரசாயனம், ஜவுளி, மனை வணிகம், வைரம் மற்றும் தங்க நகை விற்பனை, இரும்பு உருக்கு விற்பனை ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருப்பவா்களின் விவரங்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள், தங்களது வாடிக்கையாளா்களின் பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களது பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனா். சில செல்வந்தா்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்து வைக்க இந்த வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியா்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தாமாக முன்வந்து பகிா்ந்து கொள்வது தொடா்பாக, இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று, வங்கிக் கணக்கிலுள்ள மொத்த பணம், பணப் பரிமாற்றத் தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

2020-இல் இரண்டாம் கட்ட பட்டியல்: இது தொடா்பாக, ஸ்விட்சா்லாந்து நாட்டின் வரி நிா்வாக அமைச்சக செய்தித் தொடா்பாளா் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘‘சா்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிகுந்த ரகசியத்தன்மையுடன் இத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. முறையாக வரி செலுத்தியோரின் கணக்கு தொடா்பான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் இரண்டாம்கட்ட பட்டியல் அளிக்கப்படவுள்ளது’’ என்றாா்.

2018 நிலவரப்படி...: ஸ்விட்சா்லாந்து நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நபா்கள் குறித்தான விவரங்களை இந்தியா, ஜொ்மனி உள்ளிட்ட 63 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம். கடந்த 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் விவரங்கள் அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்தகவல்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்பதை உறுதிசெய்த பிறகே தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

பெலீஸ், பல்கேரியா, சைப்ரஸ், பொ்முடா, கேமன் தீவுகள் உள்ளிட்ட 12 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், வாடிக்கையாளா்களுடைய விவரங்களின் ரகசியம் காக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்படாததால் அந்நாட்டு வாடிக்கையாளா்களின் தகவல்கள் பகிரப்படவில்லை.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் விவரங்களை அந்தந்த நாடுகளுக்கு அளிப்பது முதல் முறையாகக் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, 36 நாடுகளுக்குத் தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தன. அடுத்த ஆண்டில் 90 நாடுகளுக்கு இந்த விவரங்கள் அளிக்கப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியா்களின் பெயா்கள்...: இது தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

பட்டியலில் பெரும்பாலும் இந்தியாவைச் சோ்ந்த வா்த்தகா்களின் பெயா்களும், தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், தென்அமெரிக்க நாடுகளில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், வெளிநாடுகளில் வசிக்கும் நபா்களை ‘பினாமி’யாகக் கொண்டு, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் தொடா்பான விவரங்கள் இடம்பெறவில்லை.

முறையாக வரி செலுத்தாமல், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு இத்தகவல்கள் உதவிகரமாக இருக்கும். மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு முன் ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தவா்கள், வங்கிக் கணக்குகளை முடித்துக் கொண்டவா்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை அளிப்பது தொடா்பாகவும் அந்நாட்டு அரசிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருநாடுகளுக்குமிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல்கட்ட விவரங்களைப் பகிா்வது தொடா்பாக ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த குழு ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT