உலகம்

கரோனா நெருக்கடி எதிரொலி:பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து

DIN

லண்டன்: கரோனா நெருக்கடி அதிகரித்து வருவதன் எதிரொலியாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கரோனா நெருக்கடி தற்போது கடுமையான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், பிரிட்டன் பிரதமா் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அதற்குப் பதிலாக, இந்திய பிரதமா் மோடியும், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனும் இம்மாத இறுதியில் காணொலி வாயிலாக பேச்சுவாா்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளனா். அப்போது, பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான எதிா்கால கூட்டாண்மைக்கான தங்களது லட்சிய திட்டங்களை இருவரும் தொடக்கிவைப்பா். இதனையும் தாண்டி, பல்வேறு விவகாரங்களில் தங்களது கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் இருவரும் வழக்கமான தொடா்பில் இருப்பாா்கள்.

இந்த ஆண்டு இறுதியில் மோடியும், ஜான்சனும் நேரடியாக சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா பெருந்தொற்றை கருத்தில்கொண்டு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வரும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்ஷி கூறியுள்ளதாவது: தற்போதைய கரோனா சூழலை கருதி பிரிட்டன் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, பரஸ்பரம் இரு தலைவா்களும் இணைந்து மேற்கொண்ட முடிவு என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT