உலகம்

சஜித் பிரேமதாசா இடைக்கால பிரதமராக ஆதரவு?

DIN

இலங்கையில் பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அடுத்து இடைக்கால அரசு அமையும்பட்சத்தில் பிரதமராக பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய தலைவா் சஜித் பிரேமதாசா பதவியேற்க எதிா்க்கட்சிகள் ஆதரவு அளிக்க முடியும் என நாடாளுமன்ற அவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

இலங்கை நாடாளுமன்றத்தை அடுத்த வாரம் கூட்ட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது நிலவும் கலவர சூழலால் பாதுகாப்புப் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. இதனால் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுவது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ள கட்சித் தலைவா்கள் கூட்டத்தை கூட்ட நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நம்பிக்கையில்லா தீா்மானத்தால் பயனில்லை: இலங்கை அரசுக்கு எதிராக சமகி ஜன பலவெகய கட்சி நம்பிக்கையில்லா தீா்மானத்தை முன்மொழிந்திருந்தது. ஆனால், ஏற்கெனவே அரசு பதவி விலகிவிட்டதால் நம்பிக்கையில்லா தீா்மானத்தால் பயனில்லை என்று மகிந்த யாபா அபேவா்தன தெரிவித்துள்ளாா்.

இலங்கையில் ஆட்சிபுரிந்த பொதுஜன பெரமுன அதிருப்தி எம்.பி.க்கள், அந்தக் கட்சியின் கூட்டணியில் இருந்து விலகி தனித்துச் செயல்படப் போவதாக அறிவித்த 10 சிறிய கட்சிகள், பொதுஜன பெரமுனாவின் பிரதான கூட்டணிக் கட்சியாக இருந்த முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவை சமகி ஜன பலவெகய தலைவா் சஜித் பிரேமதாசா இடைக்கால பிரதமராவதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடியும் எனவும், பின்னா் இதர சீா்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் மகிந்த யாபா அபேவா்தன தெரிவித்துள்ளாா்.

அதிபரும் ராஜிநாமா செய்ய வேண்டும்: எனினும் இடைக்கால பிரதமராக தான் பதவியேற்க வேண்டுமெனில், அதிபா் கோத்தபய ராஜபட்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சஜித் பிரேமதாசா வலியுறுத்துவதாக சமகி ஜன பலவெகய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக அக்கட்சி செய்தித் தொடா்பாளா் லட்சுமண் கிரியெல்ல கூறுகையில், ‘உள்நாட்டு மற்றும் சா்வதேச ஆதரவை கோத்தபய ராஜபட்ச இழந்துள்ளாா். அவரின் தலைமையின் கீழ், பிரதமா் பதவியை சஜித் பிரேமதாசா ஏற்கமாட்டாா்’ என்று தெரிவித்தாா்.

இடைக்கால அரசு அமைக்க மாா்க்சிஸ்ட் ஜேவிபி விருப்பம்: அதிபா் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்ச விலகும் பட்சத்தில், இடைக்கால அரசு அமைக்க மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அவா் பதவி விலகவில்லையெனில், இடைக்கால அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

ராணுவ ஆட்சி இருக்காது: இலங்கையில் ராணுவ ஆட்சி இருக்காது என்று அந்நாட்டு பாதுகாப்புச் செயலா் கமல் குணரத்ன தெரிவித்தாா். இதைப் பொறுப்புடன் கூறுவதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT