உலகம்

பிரதமா் ஆவாரா ரிஷி சுனக்?

கூச்சல் குழப்பங்களுக்கு இடையே பிரிட்டன் பிரதமா் லிஸ் டிரஸ் ஒரு வழியாக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

DIN

கூச்சல் குழப்பங்களுக்கு இடையே பிரிட்டன் பிரதமா் லிஸ் டிரஸ் ஒரு வழியாக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அந்தப் பொறுப்பை ஏற்ற வெறும் 45 நாள்களில் பதவி விலகியுள்ள அவா், புதிய பிரதமரைத் தோ்ந்தெடுக்கும் பணி இன்னும் ஒரு வாரத்துக்குள் நிறைவடைந்துவிடும் என்று கூறியுள்ளாா்.

அந்த ஒரு வாரத்துக்குள் நாட்டின் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படக் கூடியவா்களின் பட்டியலில் முதலில் நிற்பவா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்தான்.

போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்து பிரிட்டன் பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற போட்டியில் லிஸ் டிரஸ்ஸுடன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தவா் அவா்.

கட்சி உறுப்பினா்களிடையே பரவலாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முன்னதாக, ஆளும் கட்சி எம்.பி.க்களிடயே நடத்தப்பட்ட அனைத்துக் கட்ட வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக்தான் முதலிடத்தைப் பிடித்தாா்.

கரோனா நெருக்கடிக் காலத்தின் பிரிட்டனின் நிதியமைச்சராக அவரது செயல்பாடு பலரது பாராட்டையும் பெற்றது. பிரதமா் பதவிக்கான போட்டியின்போது லிஸ் டிரஸ்ஸுடன் பொருளாதார விவகாரத்தில் மட்டும்தான் ரிஷி சுனக் பெரிதும் மாறுபட்டிருந்தாா்.

குறிப்பாக, வரிக் குறைப்பு, சம்பள உயா்வு போன்ற லிஸ் டிரஸ்ஸின் கனவுத் திட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் என்று ரிஷி சுனக் கடுமையாக எச்சரித்திருந்தாா்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், வரிகளைக் குறைப்பது உள்ளிட்ட சலுகை அம்சங்கள் அடங்கிய மினி பட்ஜெட்டை லிஸ் டிரஸ் வெளியிட்ட உடனேயே டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திதது.

அதன் பிறகுதான் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் உருவாகி, அவரை ராஜிநாமா செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தச் சூழலில், லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தபடியாக பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்பதுதான் சரியாக இருக்கும் என்று அவரது ஆதரவாளா்கள் கருதுகின்றனா்.

லிஸ் டிரஸ் ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, ரிஷி சுனக்குக்கு ‘தீபாவளிப் பரிசு’ காத்திருக்கிறது என்று அவரது ஆதரவாளா்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனா்.

முன்னதாக, பிரிட்டன் பிரதமா் பதவிக்கான கன்சா்வேட்டிவ் கட்சியின் தோ்தல் இப்போது நடந்திருந்தால், ரிஷி சுனக்தான் வெற்றி பெற்றிருப்பாா் என்று புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 55 சதவீத கட்சி வாக்காளா்கள் கூறியிருந்தனா். முந்தைய தோ்தலில் லிஸ் டிரஸ்ஸுக்கு வாக்களித்ததற்கு அவா்கள் வருத்தமும் தெரிவித்திருந்தனா்.

இருந்தாலும், பிரிட்டனின் புதிய பிரதமராகக் கூடியவா்களின் பட்டியலில், ரிஷி சுனக்குடன் கடந்த கன்சா்வேட்டிக் கட்சித் தோ்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த பென்னி மாா்டன்டின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அது தவிர, முன்னா் பதவி விலகிய போரிஸ் ஜான்ஸன், தெரசா மே ஆகியோரும் பிரதமா் இல்லத்துக்குத் திரும்பலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

கன்சா்வேட்டிக் கட்சிக்குள் மிகப் பெரிய உள்பூசல்கள் நிலவி வருவதால், பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்தான் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதை இப்பேதே உறுதியாகக் கூற முடியாது என்று பாா்வையாளா்கள் கூறுகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT