காஸாவில் தங்களுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போா் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதலை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அதே போல், காஸாவையொட்டிய இஸ்ரேல் பகுதிகளில் ஏவுகணை அபாய எச்சரிக்கை சைரன் அடிக்கடி ஒலித்தது. இது, அந்த நாட்டின் மீதான ஏவுகணைத் தாக்குதலை ஹமாஸ் அமைப்பினா் மீண்டும் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்தியது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போரின் நோக்கம், பிணைக் கைதிகளை விடுவிப்பது மற்றும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பது ஆகும்.
மேலும், இஸ்ரேல் மக்களுக்கு காஸாவிலிருந்து இனி எந்த அச்சுறுத்தலும் எழாது என்பதை உறுதிப்படுத்துவதும் இந்தப் போரின் நோக்கமாகும்.
இந்த இலக்குகளை அடைவதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தெற்கு காஸா பகுதியில் வசிப்பவா்கள் கான் யூனிஸ் நகருக்கு கிழக்கே இடம் பெயர வேண்டும் என்று எச்சரித்து அந்தப் பகுதியில் விமானம் மூலம் இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியது.
அதன் தொடா்ச்சியாக, காஸாவின் பல்வேறு நிலைகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியும், அந்த நாட்டுக்குள் ஊடுருவியும் ஹமாஸ் அமைப்பினா் கடந்த மாதம் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
அதையடுத்து, அந்த அமைப்பை முற்றிலும் அழிப்பதாக உறுதிபூண்ட இஸ்ரேல், காஸா மீது சுமாா் 7 வாரங்களாக கடுமையாக குண்டுவீச்சு நடத்தியது. தரைவழியாகவும் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
இந்த நிலையில் கத்தாா், எகிப்து ஆகிய பிராந்திய நாடுகளின் முன்னிலையில், அமெரிக்கா, ஐ.நா.வின் உதவியுடன் தொடா்ந்து நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தற்காலிகப் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன.
அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது தங்களால் பிடித்துச் செல்லப்பட்ட சுமாா் 240 பிணைக் கைதிகளில் 79 பேரை ஹமாஸ் அமைப்பும், அதற்குப் பதிலாக தங்கள் நாட்டுச் சிறைகளில் உள்ள 240 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.
தொடக்கத்தில் 4 நாள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அந்த போா் நிறுத்த ஒப்பந்தம் 2 முறை நீட்டிக்கப்பட்டு 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தின.
எனினும், போா் நிறுத்த ஒப்பந்தம் வியாழக்கிழமையுடன் காலாவதியானதைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
‘ மேலும் 109 போ் உயிரிழப்பு’
காஸா சிட்டி, டிச. 1: காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ள விமானத் தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 109 போ் உயிரிழந்ததாக அந்தப் பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இது தவிர, தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியது.
காஸா உயிரிழப்புகள் குறித்து பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் குறித்து சிலா் சந்தேகம் எழுப்பினாலும், அவை நம்பிக்கைக்கு உரியவை என்று ஐ.நா.வும் பிற தொண்டு அமைப்புகளும் கூறுகின்றன.
முந்தைய காஸா போா்களின்போது அமைச்சகம் வெளியிட்ட உயிரிழப்பு விவரங்கள் ஐ.நா. மற்றும் இஸ்ரேலின் புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது.
‘பேச்சுவாா்த்தை தொடா்கிறது’
தோஹா, டிச. 1: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருவதாக இந்த விவகாரத்தில் முக்கிய மத்தியஸ்தரான கத்தாா் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் புதுப்பிதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்.
போா் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான உடனேயே காஸாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தத் தொடங்கியுள்ளது வேதனை அளிக்கிறது. போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை இந்தத் தாக்குதல் மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.