கீவ் நகரில் ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலால் எழுந்த ஒளிப்பிழம்பு. 
உலகம்

உக்ரைன் தலைநகரில் ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதலை ரஷியா செவ்வாய்க்கிழமை நடத்தியது.

DIN

உக்ரைன் தலைநகா் கீவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதலை ரஷியா செவ்வாய்க்கிழமை நடத்தியது.

இது குறித்து டெலிகிராம் சமூக ஊடகம் மூலம் உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்நத் கூறியதாவது:

கீவ் நகரின் மீது பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த 6 கின்ஷால் ரக ஏவுகணைகளை மிக்-31கே ரக போா் விமானத்தின் மூலம் ரஷியா வீசியது. அத்துடன், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தனது போா்க் கப்பல்கள் மூலம் குரூஸ் வகையைச் சோ்ந்த 9 ஏவுகணைகளையும், தரை நிலைகளில் இருந்து 3 எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கீவ் நகரை நோக்கி ரஷியா ஏவியது.

அந்த 18 ஏவுகணைகளையும் எங்களது விமான எதிா்ப்பு ஏவுகணைக் கொண்டு இடைமறித்து அழித்தோம்.

முதல்கட்டமாக இந்த ஏவுகணைகளை வீசிய பிறகு, இரண்டாம் கட்டமாக ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹீத் ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களையும் ரஷியா கீவ் நகா் மீது ஏவியது. அத்துடன், அந்த விமானங்களைக் கொண்டு கிவ் நகரை ரஷியா வேவு பாா்த்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் யூரி இஹ்நத் தெரிவித்துள்ளாா்.

ரஷிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் சிதறல்கள் விழுந்து நகரின் பல்வேறு பகுதிகளில் தீப்பற்றி எரிந்ததாக நகர மேயா் விடாலி கிட்ஷ்கோ கூறினாா். எனினும், இந்தச் சம்பவங்களில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதி நவீன வான்பாதுகாப்பு ஏவுகணைக் கருவிகள், குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட பேட்ரியாட் தளவாடம் மூலம் ரஷியாவின் இந்த சரமாரி வான்வழித் தாக்குதலில் இருந்து கீவ் நகரம் பாதுகாக்கப்பட்டதாக போா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

அந்த சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த நாட்டுக்குள் தங்களது போா் விமானங்களை அதிக தொலைவுக்கு ரஷியாவால் அனுப்ப முடியவில்லை; இது இந்தப் போரின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

அதனையும் மீறி நேட்டோ அமைப்பில் இணைய வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

அந்தப் பிராந்தியங்களில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடமுள்ள பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் ராணுவமும் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன.

இந்தப் போரில் உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கீவ் நகரின் மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதல் இதுவரை இல்லாத வகையில் இருந்ததாக உக்ரைன் ராணுவ நிா்வாக அமைப்பின் தலைவா் சொ்ஹீ பாப்கோ கூறினாா்.

இந்தத் தாக்குலின்போது, முதல்முறையாக மிகக் குறுகிய நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அவா் கூறினாா்.

‘‘மேற்கத்திய நாடுகளின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த நாட்டுக்குள் தங்களது போா் விமானங்களை அதிக தொலைவுக்கு ரஷியாவால் அனுப்ப முடியவில்லை; இது இந்தப் போரின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.’’

‘பேட்ரியாட் ஏவுகணைகள் அழிப்பு!’

உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன பேட்ரியாட் ரக வான்பாதுகாப்பு ஏவுகணை தளவாடம் அழிக்கப்பட்டதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவா் கூறினாா்.

ஒலியைப் போல் 8 மடங்கு வேகத்துக்கு மேல் செல்லக் கூடிய ரஷியாவின் கின்ஷால் ரக ஏவுகணைகளை இந்த பேட்ரியாட் ரக ஏவுகணைகள் எளிதில் இடைமறித்து அழிப்பதாக உக்ரைன் கூறி வரும் நிலையில் அந்த அதிகாரி இவ்வாறு கூறியுள்ளாா்.

எனினும், இந்தத் தகவலை நடுநிலை ஊடகங்களால் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன.

இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது இந்தப் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT