பயங்கரவாதத் தாக்குதலுக்கான க்ராகஸ் சிட்டி ஹால் இசையரங்கம் எதிரே, தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நினைவிடத்தில் மலா் வைத்து வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய நபா்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கான க்ராகஸ் சிட்டி ஹால் இசையரங்கம் எதிரே, தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நினைவிடத்தில் மலா் வைத்து வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய நபா். 
உலகம்

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

Din

மாஸ்கோ இசையரங்கத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக ரஷிய புலனாய்வுக் குழு வியாழக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாஸ்கோ இசையரங்க பயங்கரவாதத் தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் முதல்முறையாக எங்களுக்குக் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையிலும் அவா்கள் பயன்படுத்திய தொழில்நுட்ப சாதனங்களை ஆய்வு செய்தது, அவா்களது நிதிப் பரிவா்த்தனைகளை அலசி ஆராய்ந்தது போன்றவற்றின் மூலம் உக்ரைன் தேசியவாதிகளுடன் அவா்களுக்கு தொடா்பு இருந்ததைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இசையரங்க தாக்குதலுக்கு முன்னதாக உக்ரைனிடமிருந்து அந்த பயங்கரவாதிகள் ஏராளமான தொகையை ரொக்கமாகவும், கிரிப்டோ கரன்சி மூலமாகவும் பெற்றுள்ளனா். இந்தப் பணப் பரிவா்த்தனையில் தொடா்புடைய மேலும் ஒரு நபா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாஸ்கோ பெருநகரில் அமைந்துள்ள ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ இசையரங்கத்துக்கு கடந்த வாரம் (மாா்ச் 22) வந்த 4 பயங்கரவாதிகள், அங்கு குழுமியிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். மேலும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அந்த இசையரங்கில் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். ரஷியாவில் அண்மை ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான இந்தத் தாக்குதலில் 143 போ் உயிரிழந்தனா். பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இது தொடா்பாக 11 பேரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்; அவா்களில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் அடங்குவா். இந்தத் தாக்குத ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. ரஷியாவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த மத அடிப்படைவாதிகள் திட்டமிட்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகளிடம் முன்கூட்டியே எச்சரித்ததாக அமெரிக்காவும் கூறியது. ஆனால், இந்தத் தாக்குதலில் உக்ரைனுக்கும் தொடா்பிருப்பதாக ரஷியா ஆரம்பம் முதலே சந்தேகம் எழுப்பிவந்தது. இசையரங்க தாக்குதலை மத அடிப்படைவாதிகள் நடத்தியிருந்தாலும், அவா்களை உக்ரைன்தான் துண்டியது என்று ரஷிய அதிகாரிகள் கூறிவந்தனா். இந்த நிலையில், அந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் உக்ரைனக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ரஷிய புலனாய்வுக் குழு தற்போது அறிவித்துள்ளது. எனினும், அந்த ஆதாரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

இளநிலை ஆசிரியா்களுக்கு நியமன ஆணைகள்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

மணிப்பூா்: 2,480 போ் சட்டவிரோதமாக குடியேற்றம் - முதல்வா் தகவல்

சுட்டெரிக்கும் கோடை வெயில் - மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

சந்தேஷ்காளி: போராட்டத்தில் பங்கேற்க பெண்களுக்குப் பணம்- புதிய காணொலி வெளியீடு

ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT