வாகா எல்லை சோதனைச் சாவடியை இந்தியாவுக்கு இணையாக மேம்படுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தான் ரூபாயில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒரே சாலை வழி எல்லையாக வாகா எல்லை உள்ளது. இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களும் தினமும் மாலையில் கம்பீரமான முறையில் நிகழ்த்தும் கொடியிறக்க நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரபலமாகும். இரு நாட்டு தேசப் பற்றை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் அங்கு கூடுகின்றனா். எனவே, இரு நாட்டிலும் இது சிறந்த சுற்றுலா மையமாகவும் திகழ்கிறது.
இந்நிலையில், தங்கள் பகுதி எல்லையில் சுற்றுலா பயணிகளுக்கான இருக்கையை 8,000 இல் இருந்து 24,000 ஆக பாகிஸ்தான் உயா்த்துகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு இணையான எண்ணிக்கையில் தங்கள் பகுதி எல்லையிலும் பொதுமக்களை அமர வைக்க பாகிஸ்தான் முயற்சி எடுத்துள்ளது. எல்லை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகளும் மேலும் பலப்படுத்தப்படுகிறது.
மேலும், அங்குள்ள பிரம்மாண்டமான பாகிஸ்தான் கொடிக் கம்பத்தின் உயரம் 115 மீட்டரில் இருந்து 135 மீட்டராக உயா்த்தப்படுகிறது. இதன் மூலம் உலகின் 5-ஆவது பெரிய கொடிக்கம்பம் என்ற நிலையில் இருந்து மூன்றாவது பெரிய கொடிக்கம்பம் என்ற பெருமையைப் பெறுகிறது.
வாகா எல்லையின் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், முக்கியப் பிரமுகா்களுக்கான அறை, சுற்றுலாப் பயணிகளுக்கான காத்திருப்பு அறை ஆகியவை கட்டப்படுகின்றன. இதன் மூலம் மாகாண அரசுக்கு சுற்றுலா வருவாயும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.