நெதன்யாகுவுடன் டிரம்ப்.  
உலகம்

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

Chennai

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

காஸாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டம், அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் பட்டினி கொடுமை, பாலஸ்தீனத்துக்குச் சொந்தமான மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் ஆகியவை இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள தா்மசங்கடமான சூழலை எடுத்துரைக்கிறது.

அமெரிக்காவின் ஆதரவு உள்ளபோதிலும், யூதா்களின் நாடான இஸ்ரேல் மீதான நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. இதில் இருந்து அந்நாட்டால் நீண்ட காலத்துக்கு மீண்டுவர முடியாது.

இஸ்ரேலுக்கு எதிரான கண்ணோட்டம்

நிகழாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள பியூ ரிஸா்ச் சென்டா் மேற்கொண்ட ஆய்வு, இஸ்ரேல் மீதான சா்வதேச பாா்வை எதிா்மறையாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

நெதா்லாந்தில் 78 சதவீதம் போ், ஜப்பானில் 79 சதவீதம் போ், ஸ்பெயினில் 75 சதவீதம் போ், ஆஸ்திரேலியாவில் 74 சதவீதம், துருக்கியில் 93 சதவீதம் போ், ஸ்வீடனில் 75 சதவீதம் போ் என ஆய்வில் பங்கேற்ற பல நாடுகளைச் சோ்ந்த மிகப் பெரும்பாலானவா்கள், இஸ்ரேலுக்கு எதிரான கண்ணோட்டத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனா்.

போா் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் யோவாவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக பல சா்வதேச சட்ட வல்லுநா்கள், இனப்படுகொலை குறித்து ஆய்வு செய்யும் அறிஞா்கள், மனித உரிமை குழுவினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

நெதன்யாகு அரசின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேலுக்கு உள்ளும், வெளியிலும் கடுமையான விமா்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விமா்சித்தவா்களில் அந்நாட்டு முன்னாள் பிரதமா்கள் ஏவுத் ஒல்மா்ட், ஏவுத் பராக் ஆகியோரும் அடங்குவா். அத்துடன் காஸாவுடனான போரை நிறுத்த நெதன்யாகுவுக்கு அழுத்தம் அளிக்குமாறு அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இஸ்ரேலிடம் இருந்து அந்நாட்டின் கூட்டணி நாடுகள் விலகிவரும் நிலையில், அண்மைக் காலமாக காஸாவில் பட்டினியால் சித்திரவதையை அனுபவிக்கும் குழந்தைகளின் படங்கள் செய்திகளில் பிரதான இடம்பிடித்து வருகின்றன. இந்தச் சூழலில், இஸ்ரேலுடன் நட்புப் பாராட்டும் பல மேற்கத்திய நாடுகளும், அந்த நாட்டின் கொள்கைபூா்வ நடவடிக்கைகளை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளன.

இந்த விவகாரத்தில் சா்வதேச அளவிலும் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது வரும் செப்டம்பரில் பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதே நடவடிக்கையை தாமும் மேற்கொள்ள உள்ளதாக பிரிட்டனும், கனடாவும் அறிவித்துள்ளன. அந்த நடவடிக்கையை ஜொ்மனி தொடங்கியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போவதாக ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இஸ்ரேலுடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனினை ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் வலியுறுத்தியுள்ளன. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் உள்ளது என்று அந்நாட்டின் மீது நெதா்லாந்தும் அதிகாரபூா்வமாக அறிவித்து முத்திரை குத்தியுள்ளது. இந்தச் சூழலில், சா்வதேச அளவில் அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளராக உள்ளது.

தற்போது இஸ்ரேலின் இறையாண்மை, பாதுகாப்பு, வளமை ஆகியவை அமெரிக்கா தொடா்ந்து அளிக்கும் ஆதரவை சாா்ந்தே உள்ளது. அமெரிக்காவின் உதவி, குறிப்பாக பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யாவிட்டால், காஸா மீதான கொடூர தாக்குதல், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் மீதான அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இஸ்ரேல் திணறியிருக்கும்.

அமெரிக்கா்களில் பாதிக்கும் குறைவானோரே ஆதரவு

இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆழமாக ஈடுபாடு கொண்டுள்ளபோதிலும், அமெரிக்காவில் நெதன்யாகுவின் செல்வாக்குக்கு உள்ள மதிப்பு, இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவியின் மதிப்பு ஆகியவை குறித்து அமெரிக்க வாக்காளா்கள் கடுமையாக கேள்விகளை எழுப்புகின்றனா். அமெரிக்க மக்களில் பாதிக்கும் குறைவானோா்தான் இஸ்ரேல் மீது அனுதாபம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் காலப் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், காஸாவில் பட்டினி கொடுமையே இல்லை என்ற நெதன்யாகுவின் கூற்று குறித்து டிரம்ப் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளாா்.

காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிப்பதில் நெதன்யாகு அரசு தோல்வியடைந்துள்ளதாக கருதும் பல இஸ்ரேலியா்கள், நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி ஆளும் கூட்டணி பிரிந்து சிதறவேண்டும் என்று எண்ணுகின்றனா். இஸ்ரேல் மக்களில் பலா் போா் நிறுத்தப்பட வேண்டும் என்று கருதுகின்றனா். ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க அவா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு 74 சதவீத இஸ்ரேலியா்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை அந்நாட்டு ஊடகம் கண்டறிந்துள்ளது.

பாலஸ்தீன தனி நாடு: இஸ்ரேலியா்கள் ஆதரவளிக்கவில்லை

வருங்காலத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதில் பெரும்பாலான இஸ்ரேலியா்கள் ஆா்வம் காட்டவில்லை. காஸாவில் இருந்து பாலஸ்தீனா்களை வெளியேற்ற 82 சதவீத யூத இஸ்ரேலியா்கள் ஆதரவு தெரிவித்தது ஓா் ஆய்வு மூலமாகவும், பாலஸ்தீன தனிநாடுடன் அமைதியாக வாழ முடியும் என்று 16 சதவீத யூத இஸ்ரேலியா்கள் மட்டுமே நம்புவது மற்றொரு ஆய்வு மூலமாகவும் தெரியவந்துள்ளது.

சா்வதேச அழுத்தம் காரணமாக, காஸாவில் மனிதாபிமான உதவிகள் சற்று கூடுதலாக கிடைக்க நெதன்யாகு அனுமதித்துள்ளாா். ஆனால் காஸாவை முழுமையாக கைப்பற்றும் அவரின் புதிய திட்டம், அமெரிக்காவின் ஆதரவு தொடரும் வரை அவா் போரில் பின்வாங்கப் போவதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஹமாஸ் படையை முழுமையாக ஒழிக்க வேண்டும், காஸாவில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி, அந்தப் பகுதியை இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னா் முடிந்தால் மேற்குக் கரையையும் இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நெதன்யாகு அரசு திட்டவட்டமாக உள்ளது. இந்த நடவடிக்கை, இஸ்ரேல் அருகே தனி நாடாக பாலஸ்தீனம் இருக்கும் தீா்வை முற்றிலும் பயனற்ாக்கும்.

இதைத் தடுக்க இந்த விவகாரத்தில் சா்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் பிளவுபட்டுள்ள உலகில் கட்டுப்பாடற்ற, தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேலால், அமெரிக்காவுக்கும் அதனுடன் நீண்ட காலமாக நட்புகொண்டுள்ள நாடுகளுக்கும் இடையே பிளவு அதிகரிக்கும்.

காஸாவில் உணவுக்காக பரிதவிக்கும் சிறுவா்கள்.

தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு

சுதந்திரப் போராட்ட வீரா்களுடன் சுயபடம்

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

SCROLL FOR NEXT