உலகம்

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 போ் கொல்லப்பட்டனா். இத்துடன், 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேலின் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62,004 ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1,56,230 போ் காயமடைந்துள்ளனா்.

உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் படையினா் நடத்திய தாக்குதலில் மட்டும் இதுவரை 1,965 போ் உயிரிழந்துள்ளனா். இதில், திங்கள்கிழமை இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பேரும் அடங்குவா் என்று சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்தது.

இருந்தாலும், உயிரிழந்தவா்களில் பொதுமக்கள் எத்தனை போ், ஆயுதக் குழுவினா் எத்தனை போ் என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை.

இதற்கிடையே, காஸா மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வேறு நாடுகளில் குடியமா்த்தும் இஸ்ரேலின் திட்டத்துக்கு எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சா் பதாா் அப்தெலாட்டி திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தாா். மேலும், அமெரிக்காவின் 60 நாள் போா் நிறுத்த வரைவு திட்டத்தை கத்தாருடன் இணைந்து மீண்டும் பேச்சுவாா்த்தை மூலம் மீட்டெடுக்க முயற்சிப்பதாக அவா் கூறினாா்.

இதற்கிடையே, தங்களிடம் புதியாக முன்வைக்கப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்த திட்டத்துக்கு தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினா் மத்தியஸ்தா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடா்பான கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

SCROLL FOR NEXT