காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியாளர்களில், தி அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் சுயாதீன புகைப்படச் செய்தியாளர் மரியம் டக்காவும் ஒருவர்.
போரின் கோர முகத்தை உலகுக்குக் காட்ட போர்க் களத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த மரியம் டக்கா இஸ்ரேல் தாக்குதலில் பலியானார். அவருக்கு வயது 33.
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகருக்கு உள்பட்ட நஸ்ஸர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் ராணுவம் இரு முறை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் 4 வது தளத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இதில், தி அசோசியேட் பிரஸ் சுயாதீன புகைப்படச் செய்தியாளர், உள்பட பல செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
போர்க் களத்தில் மரியம் டக்கா, எடுத்திருந்த விடியோக்கள், புகைப்படங்கள், பாலஸ்தீனிய மக்கள் எதிர்கொண்டுவரும் பேரிடர்களை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக இருந்தது. வீடுகளை வீட்டு வெளியேறும் பெண்கள், உதவிப் பொருள்களுடன் வரும் டிரக்குகளை சூழ்ந்துகொள்ளும் மக்கள், இறுதிச் சடங்குகள் நடக்கும் இடங்களில் இறுகிக் கிடக்கும் மௌனம், காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது, உணவின்றி தோல் போர்த்திய எலும்பாக சுற்றும் சிறுவர்களை, மரியம் எடுத்த புகைப்படங்கள் துயரத்தின் வலியை துல்லியமாக பதிவு செய்திருந்தது.
போர் நடந்துகொண்டிருக்கும்போது, டக்கா, கான் யூனிஸ் பகுதியில் அமைந்துள்ள நஸ்ஸார் மருத்துவமனையில் தங்கியிருந்தார். அவர் மற்றும் அந்த மருத்துவமனையில் இருந்த 5 செய்தியாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
மிகத் துயரமான, கடும் சிரமங்களுக்கு இடையே அவர் போர்க்களத்தில் பணியாற்றி, வெளி உலகுக்கு, காஸாவில் மக்கள் படும் துயரங்களை குறிப்பாக குழந்தைகளின் அல்லங்களை வெளிச்சத்துக்கு எடுத்து வந்தார் என்று அசோசியேட் பிரஸ் ஆசிரியர் மூத்த துணைத் தலைவர் ஜூலி பாஸ் கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போர்தான், செய்தியாளர்களுக்கான மிக மோசமான போராக அமைந்துவிட்டது. இதுவரை 189 பாலஸ்தீனிய செய்தியாளர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக செய்தியாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மரியம் டக்கா அளித்த நேர்காணலில், சர்வதேச அமைப்புகள் காஸாவில் உள்ள செய்தியாளர்களை பாதுகாக்கவும், உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
கடந்த ஞாயிறன்று, அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில், காஸாவில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்று விடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
இங்கு எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. அபாய நிலையில்தான் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கதை உள்ளது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மரியம் டக்கா தன்னுடைய 13 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், போர் தொடங்கியதும், மிகனை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
அவர் தன்னுடைய மகனுக்கு இறுதிச் செய்தியாக, என்னை எப்போதும் மறந்துவிடாதே, உன்னை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள என்னால் என்ன முடியுமோ அது அனைத்தையும் செய்திருக்கிறேன் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பு, மரியம் டக்கா, தந்தைக்கு தன்னுடைய சிறுநீரகம் ஒன்றை தானமளித்ததாகவும் தங்கை நடா டக்கா கூறுகிறார்.
அவர் எப்போதும் மருத்துவமனைக்கு அருகிலேயே இருந்தார். அங்குதான் காயமடைந்து வரும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அங்குதான் காஸா போரின் கொடூர முகம் எப்போதும் ரத்தக் கறைபடிந்த பற்களை நீட்டிக்கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
அசோசியேட் பிரஸ் மூத்த செய்தியாளர் கூறுகையில், மருத்துவமனை மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, டக்கா என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. பிறகு நான் அவரைத் தொடர்புகொண்டேன். டக்கா போனை எடுக்கவில்லை. நான் பதறினேன். ஆனால், அவர் தாக்குதல்களை விடியோ எடுத்துக் கொண்டிருப்பார் என்றுதான் நினைத்தேன். ஒருபோதும் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று நினைக்கவேயில்லை. மீண்டும் அழைத்தேன். அவர் போனை எடுக்கவேயில்லை. எப்போதும் எடுக்கவே மாட்டார் என்று கூறுகிறார் வருத்தத்துடன்.
இதையும் படிக்க... சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.