உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான சில சிறப்புத் திறன்கள் அமெரிக்கப் பணியாளர்களிடம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையொப்பமிட்டார்.
இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று வேலைக்குச் செல்பவர்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என்பதால், இந்த நடவடிக்கை இந்தியர்களிடையே பெருத்த இடியாக இறங்கியது.
இது அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்ற பணியாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹெச்-1பி நடைமுறையில் தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க தொழில்நுட்ப துறைக்கு வெளிநாட்டு திறன்களும் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் லாரா இங்க்ராஹாமுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கான வேலைகளுக்கு முன்னுரிமை அளித்தாலும், குறிப்பாக சில துறைகளான உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு, உள்நாட்டில் பெற முடியாத திறன்கள் தேவைப்படுகின்றன” என்றார்.
அமெரிக்கர்களிடன் திறன் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, “இல்லை... உங்களிடம் இல்லை.. உங்களிடம் போதிய திறன் இல்லை. மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களை ஒரு ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலை என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஏற்பட்ட முடக்கம், டிரம்ப் அரசுக்கு எதிரான போராட்டங்கள், மேயர் தேர்தல் தோல்வி, நம்பிக்கையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அதிபர் டிரம்ப்பின் திடீர் மாறுதலுக்கு காரணமாக அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.