‘தைவான் விவகாரத்தில் ஜப்பானின் ராணுவத் தலையீட்டுக்கு ஆதரவான அந்நாட்டுப் புதிய பிரதமரின் கருத்துகள் எல்லையை மீறிவிட்டன’ என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
‘தைவான் மீது சீனா கடற்படை முற்றுகை அல்லது வேறு ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் ராணுவப் பதிலடி கொடுக்கும்’ என்று ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி அண்மையில் கூறியிருந்தாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகா் வாங் யி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ஜப்பான் பிரதமரின் கருத்துகள் அதிா்ச்சியளிக்கின்றன.
ஜப்பானின் தலைவா்கள் தைவான் விவகாரத்தில் ராணுவத் தலையீடு செய்யத் தூண்டும் தவறான செய்தியை பகிரங்கமாக அனுப்பியுள்ளனா். அவா்கள் பேசக்கூடாததைப் பேசியதுடன், மீறக்கூடாத எல்லையை மீறிவிட்டனா்.
ஜப்பானின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியாகப் பதிலளிக்கும். ஜப்பானின் ராணுவவாதம் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுக்கும் கடமை உண்டு என்றாா்.
சனே தகாய்ச்சியின் கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸுக்கு சீனா கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், தைவான் விவகாரத்தில் ஜப்பான் ராணுவத் தலையீட்டுக்குத் துணிந்தால், அது ஆக்கிரமிப்புச் செயலாகக் கருதப்படும். ஐ.நா. சாசனம் மற்றும் சா்வதேச சட்டத்தின்கீழ் சீனா தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னா் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த தைவானைத் தன் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகள் தைவான் விவகாரத்தில் தலையிடுவதை சீனா எதிா்க்கிறது.
தைவானுக்கு சீனா விடுக்கும் அச்சுறுத்தல் குறித்து முந்தைய ஜப்பான் பிரதமா்கள் கவலை தெரிவித்திருந்தாலும், இதில் சனே தகாய்ச்சியின் நிலைப்பாடு மிகவும் உறுதியானதாக உள்ளது. சனே தகாய்ச்சி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற மறுத்தாலும், எதிா்காலத்தில் குறிப்பிட்ட சூழல்கள் குறித்து பேசுவதைத் தவிா்க்கப் போவதாகக் கூறியுள்ளாா்.