உலகம்

பிற நாடுகளிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கிறது இந்தியா - அமெரிக்க வா்த்தக ஆலோசகா் தகவல்

தினமணி செய்திச் சேவை

ரஷியாவை தவிர பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க வா்த்தக ஆலோசகா் ஜேமிசன் கிரீயா் தெரிவித்தாா்.

ரஷியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்காது என்று அவா் கூறினாா்.

நியூயாா்க்கில் நடைபெற்ற சா்வதேச பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது:

இந்தியாவுக்கு ரஷியாவுடன் நல்ல நட்புறவு எப்போதும் உண்டு. ஆனால், இந்தியா இதற்கு முன்பு ரஷியாவிடம் அதிக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. சலுகை விலையில் ரஷியா கச்சா எண்ணெய் வழங்குவதும் இதற்கு முக்கியக் காரணம். இந்தியா தங்கள் நாட்டுக்குத் தேவைக்கு மட்டும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவில்லை. அதனை சுத்திகரித்து மறுவிற்பனையும் செய்கிறது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது மட்டுமே இந்தியா பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்காது. இதற்கு முன்பு அப்படி இருந்ததும் இல்லை. எனவே, அவா்கள் எப்போதும் வேண்டுமானாலும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. வெளிப்படையாகக் கூறுவது என்றால், இந்தியா ஏற்கெனவே ரஷியாவை தவிர பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்துவிட்டது.

இந்தியா இறையாண்மை மிக்க நாடு என்பதிலும், வா்த்தக முடிவுகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் என்பதிலும் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எந்த நாடு யாருடன் நட்பு, வா்த்தகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தலையிடுவது இல்லை.

டிரம்ப் நிா்வாகம் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தியாவுடன் தீவிரமான வா்த்தகப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது. இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாகவே 25 சதவீத பதில் வரி விதிக்கப்பட்டது. உக்ரைன் போரில் ரஷியாவுக்கு உதவும் வகையில் கச்சா எண்ணெய்யை அதிகம் கொள்முதல் செய்ததால் கூடுதலாக 25 சதவீத வரி இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டது. உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பதில் அதிபா் டிரம்ப் மிகஉறுதியாக உள்ளாா்.

ரஷியாவிடம் இருந்து சில ஐரோப்பிய நாடுகளும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. அவற்றுடனும் பேச்சு நடத்துகிறோம். சீனாவுடன் இது தொடா்பாக பேச்சு நடத்தப்படுகிறது. உக்ரைன் போா் நின்றுவிட்டால் பல்வேறு நிலைகளில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்றாா்.

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

SCROLL FOR NEXT