வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் காரணமாக ஆட்சியில் இருந்து அகற்றப்பட் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் புதன்கிழமை பிறப்பித்தது.
தனது தலைமையிலான அவாமி லீக் ஆட்சியின்போது அரசியல் எதிரிகளை மா்மமான முறையில் கடத்திச் சென்று காணாமல் போகச் செய்ததன் மூலம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட வழக்கில் ஹசீனாவையும், மேலும் 28 பேரையும் கைது செய்ய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு உத்தரவிட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டவா்களை ரகசிய இடங்களில் தடுத்து வைத்தது, சித்திரவதை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவா்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அக்டோபா் 22-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனா். மாணவா் போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆக. 5-ஆம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தது நினைவுகூரத்தக்கது.