நேபாளத்தில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த 540 இந்தியக் கைதிகள் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ குழு’ என்ற பெயரில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேபாள அரசுக்கு எதிராக கடந்த செப். 8,9 ஆகிய நாள்களில் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, நேபாளத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பதுடன், அந்நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இந்த நிலையில், நேபாளத்தில் தீவிரமடைந்த ஜென் ஸீ போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, அங்குள்ள வெவ்வேறு சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சுமார் 540 இந்தியக் கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப். 9-இல், 13,000க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பியிருக்கின்றனர்.
இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளைச் சேர்ந்த கைதிகள் 108 பேரும் மாயமானதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை நேபாள சிறைச்சாலை மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ள சுமார் 5,000 நேபாள குடிமக்களும் மாயமான நிலையில், அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.