அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.
கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது:
“முதலாம் உலகப் போரையும் இரண்டாம் உலகப் போரையும் நாங்கள் வென்றுள்ளோம். எங்களின் பாதுகாப்புத் துறையை போர்த் துறை என்றே அழைக்க வேண்டும். பாதுகாப்பு என்பது ஒரு பகுதி மட்டுமே. விரைவில் பெயர் மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பெயர் மாற்றத்துக்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல்முறையாக ராணுவத்தை உருவாக்கியபோது போர்த் துறை என்ற பெயரையே வைத்தார்.
பின்னர் 1949 ஆம் ஆண்டு அதிபர் ஹாரி ட்ரூமன், முப்படைகளை இணைத்து பாதுகாப்புத் துறை எனப் பெயரிட்டார். அப்போது காங்கிரஸிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகே பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.