இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நிலையில், அவற்றில் பல ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனினும் அந்நாட்டின் ஈலாட் நகரையொட்டி உள்ள ரமோன் சா்வதேச விமான நிலையத்தை ஒரு ட்ரோன் தாக்கியது.
இதில் 50 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் லேசாக காயமடைந்தாா். இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டு, விமான சேவை நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து யேமனில் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
2 வாரங்களுக்கு முன்பு யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹூதி அரசின் பிரதமராக இருந்த அகமது அல்-ரஹாவி உள்பட பலா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.