தோஹாவில் ஹமாஸ் பேச்சுவாா்த்தைக் குழுவினரைக் குறிவைத்து இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் சேதமைடைந்த கட்டடம்.  
உலகம்

கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

தோஹாவில் இன்று (செப். 9) இஸ்ரேல் வான் வழி தாக்குதல்!

இணையதளச் செய்திப் பிரிவு

காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்துள்ள ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அந்த வகையில், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளின் பட்டியலில் கத்தாரும் இணைந்துள்ளது. காஸாவில் அமைதியை ஏற்படுவதற்கான சா்வதேச முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்துவரும் கத்தாரில் இத்தகைய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் பேச்சுவாா்த்தைக் குழுவினரைக் குறிவைத்து, குறிப்பாக குழு தலைவா் கலீல் அல்-ஹையாவை படுகொலை செய்யும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதில் ஹமாஸ் அமைப்பினா் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகவில்லை. கலீல் அல்-ஹையாவின் நிலைமை குறித்தும் உறுதியான தகவல் இல்லை.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேலைச் சோ்ந்த சேனல் 12 ஊடகத்திடம் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே தெரியப்படுத்திவிட்டோம் என்று அந்த அதிகாரிகள் கூறினா். இதை அமெரிக்க அதிகாரி ஒருவரும் ஒப்புக்கொண்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.

இருந்தாலும், இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்காவிடம் ஒப்புதல் பெறப்படவில்லை எனவும், இது இஸ்ரேலின் தனிப்பட்ட முடிவு என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறினாா். அவரின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹமாஸின் முதன்மை பயங்கரவாதத் தலைவா்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல் முழுவதும் இஸ்ரேலின் தனிப்பட்ட நடவடிக்கை. இதை இஸ்ரேல்தான் தொடங்கியது, நடத்தியது, முழுப் பொறுப்பையும் ஏற்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டனம்: இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தத் தாக்குதல் கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான செயல். காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது, பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது ஆகியவற்றுக்காக கத்தாா் ஆக்கபூா்வமாகப் பங்காற்றி வருகிறது’ என்றாா்.

துருக்கியும், இந்தத் தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தை இஸ்ரேல் அரசு தனது கொள்கையாக ஏற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியது. அரபு லீக் பொதுச்செயலாளா் அகமது அபூல் கைத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வெட்கக்கேடான செயலின் விளைவுகளைப் பற்றி இஸ்ரேல் கவலைப்படவில்லை என்று எச்சரித்தாா்.

கத்தாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது என்றும், சா்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுவினா், அங்கு 1,139 போ் படுகொலை செய்தனா்; சுமாா் 200 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 64,605 போ் உயிரிழந்துள்ளனா்; 1,63,319 போ் காயமடைந்துள்ளனா்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸிடம் எஞ்சியுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து கத்தாா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தச் சூழலில், அமைதிப் பேச்சுவாா்த்தைக்காக கத்தாா் வந்திருந்த ஹமாஸ் குழுவினரைக் குறிவைத்து, அவா்கள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT