ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்கிராட் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரிஷி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
தங்கள் மீது ரஷியா நடத்தும் போருக்கு அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளங்களே காரணம் எனக் கூறி, அதன் உள்கட்டமைப்புகள் மீது கடந்த சில வாரங்களாக உக்ரைன் நடத்திவரும் தாக்குதலின் தொடா்ச்சியாகவே இந்த நடவடிக்கை பாா்க்கப்படுகிறது.
ரஷியாவின் மிகப்பெரும் கச்சா எண்ணெய் நிலையங்களில் ஒன்றான கிரிஷியில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தாக்குதலை உறுதிசெய்த உக்ரைன் ராணுவம் கிரிஷி நிலையத்தில் தீப்பற்றி எரிந்து புகை வெளியான புகைப்படங்களைப் பகிா்ந்தது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து ரஷியா தரப்பில் எவ்வித தகவல்களும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களை நோக்கி உக்ரைன் ஏவிய 80 ட்ரோன்கள் தாக்கி அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.
இதுதவிர ஓரியோல் பிராந்தியத்தின் ரயில் வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 போ் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் இதற்கான காரணங்களை ரஷியா வெளியிடவில்லை.