இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமா் அன்டோனியோ தஜானி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா். அதேபோல் அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவும் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயாா்க் வந்த அன்டோனியோ தஜானி இருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா-இத்தாலி இடையே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நட்புறவு நீடித்து வருகிறது. நான் இந்திய பயணம் மேற்கொள்ளும்போது இதை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
இந்தியாவுக்கு நாங்கள் அளிக்கும் முன்னுரிமை காரணமாகவே இத்தாலியின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ.51,800 கோடி (500 மில்லியன் யூரோ) வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிக்கும் என உறுதிப்படுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.