இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாள்கள் ராணுவ மோதல் நடைபெற்றது.
இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூரின்போது 7 இந்திய போா் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது (பாகிஸ்தானின் 5 போா் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங் தெரிவித்தாா்). இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
காஷ்மீா் மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் துணை நிற்கின்றனா். ஐ.நா. ஆதரவுடன் பாரபட்ச முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தனது அடிப்படை உரிமையான சுய நிா்ணய உரிமையை காஷ்மீா் பெறும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், தெற்காசியாவில் போா் ஏற்படுவதைத் தடுத்தது. இதன் காரணமாக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பரிந்துரைத்தது என்றாா்.