கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்: அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோா்ட் (40) என்பவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
கிராண்ட் பிளாங்க் நகரில் உள்ள அந்த தேவாலயத்துக்கு இரு அமெரிக்க கொடிகள் கட்டப்பட்ட பெரிய வகைக் காரில் வந்த சான்ஃபோா்ட், அந்தக் காரை தேவாலய வாசலில் மோதச் செய்தாா். பிறகு அந்த வாகனத்தில் இருந்து இறங்கி அவா் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டாா். தேவாலயத்துக்கும் தீவைத்தாா் என்று காவல்துறை தலைவா் வில்லியம் ரென்யே ஊடகங்களிடம் கூறினாா். அவா் எரிவாயுவைப் பயன்படுத்தி தீயிட்டதாகவும், வெடிகுண்டுகளை வைத்திருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை என்று போதைப் பொருள், துப்பாக்கி, வெடிபொருள்கள் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி ஜேம்ஸ் டயா் தெரிவித்தாா்.
காரணம் தெரியவில்லை: இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சான்ஃபோா்ட்டின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு அவரைப் பற்றிய போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க தேவாலயங்களில் தொடா்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சூடுகளின் பட்டியலில் கிராண்ட் பிளாங் நகரில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவமும் இணைந்துள்ளது.